Published : 08 Mar 2024 06:13 AM
Last Updated : 08 Mar 2024 06:13 AM
சென்னை: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஐம்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் தேவநேயப் பாவணர்விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட விருதாளர் ப.அருளிக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழுடன் விருது தொகை ரூ.2,00,000-ஐ வழங்கினார்.
இதேபோல், வீரமாமுனிவர் விருது ச.சச்சிதானந்தத்க்கும், நற்றமிழ் பாவலர் விருது அரிமாபாமகனுக்கும், புதுக் கவிதை வகைப்பாட்டில் தேர்வு செய்யப்பட்ட கவுதமன் நீல்ராசு உள்பட 25 பேருக்கு அமைச்சர் சாமிநாதன் விருதுகளை வழங்கினார்.
இதையடுத்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள பழந்தமிழர் இலக்கியங்களின் ஒலி நூல்கள் மற்றும் கவிஞர் தமிழ் ஒளி குறித்தான ‘கவிஞர் தமிழ்ஒளியின் படைப்புவெளி’ எனும் நூலை வெளியிட்டார்.
தொடர்ந்து, சங்கப் புலவர்கபிலர் நினைவாகத் தமிழ் வளர்ச்சித்துறையால் திருக்கோவிலூரில் ரூ.13.24 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள நினைவுத்தூண், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை.யில் ரூ.5,03,57,000 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் பன்னோக்குக் கூடம், உள்விளையாட்டு அரங்கம், கூடுதல் மகளிர் விடுதி, பழைய ஆடவர் விடுதி முதல் தளம் ஆகிய கட்டிடங்கள் மற்றும் ‘குறளோவியம்’ என்ற பெயரில் ஒலி-ஒளிப்பதிவுக் கூடம் ஆகியவற்றின் கல்வெட்டுக்களைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி செயலர் இல.சுப்பிரமணியன், இயக்குநர் அவ்வை அருள், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் வி.திருவள்ளுவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT