Published : 08 Mar 2024 05:20 AM
Last Updated : 08 Mar 2024 05:20 AM

மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் ரூ.10,158 கோடி மதிப்பில் வடசென்னை மிக உய்ய அனல் மின் நிலையம் - 3: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வடசென்னை மிக உய்ய அனல் மின் நிலையம்-3- ஐ நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, மின் உற்பத்தியை தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், வடசென்னை அனல் மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் உள்ள முதல் நிலையின் 3 அலகுகளில் 630 மெகாவாட், 2-வது நிலையின் இரு அலகுகளில் 1,200 மெகாவாட் என, 1,830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், அத்திப்பட்டு கிராமத்தில் 190 ஏக்கர் நிலப்பரப்பில், 800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில், வடசென்னை மிக உய்ய அனல் மின் நிலையம் -3 (வடசென்னை அனல் மின் நிலையம் நிலை-3) அமைக்க கடந்த 2010-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியின் வழிகாட்டுதலின் படி அரசாணை வெளியிடப்பட்டது.

இதையடுத்து, வடசென்னை மிக உய்ய அனல் மின் நிலையம்-3 அமைக்கும் பணி கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.10,158 கோடி மதிப்பில் நடைபெற்று வந்த இப்பணி சமீபத்தில் முடிவுக்கு வந்தது.

தமிழகத்தின் முதல் மிக உய்ய அனல்மின்நிலையமான இந்த வடசென்னை மிக உய்ய அனல் மின் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, வளாகத்தை பார்வையிட்டார்.

அதி உய்ய நிலை வெப்ப தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிறுவப்பட்டுள்ள இந்த அனல் மின் நிலையம், பிற அனல் மின் நிலையங்களை ஒப்பிடும்போது 5 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை அதிக திறன் மிக்கது. இதனால், இந்த அனல் மின் நிலையம் உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்கான எரி பொருள் செலவு குறையும். மின் உற்பத்தியை தொடங்குவதற்கு குறைவான நேரமே தேவைப்படும்.

ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய நிலக்கரி நுகர்வு 0.45 கிலோ கிராம் அளவு மட்டுமே தேவைப்படுவதால் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை குறைகிறது.

சுற்றுச்சூழல் நட்புணர்வுத் தன்மை கொண்ட இந்த அனல் மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 765 கி.வோ. மின் தொடரமைப்பு மூலம் மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் பகிர்மானம் செய்யப்பட உள்ளது.

இந்த புதிய அனல் மின் நிலையம், மாநிலத்தின் மின் உற்பத்தித் திறனை மேலும் அதிகரித்து, மாநிலத்தின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய உறுதுணை புரியும். இதனால், வெளிசந்தையில் மின் கொள்முதல் செய்வது குறைக்கப்படுவதால், மின்சார வாரியத்தின் நிதி நிலை மேம்படும் என, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

இந்த அனல் மின் நிலையம் திறப்பு நிகழ்வில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, காந்தி, எரிசக்தி துறை செயலாளர் பீலா வெங்கடேசன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், திருவள்ளூர் எம்.பி.ஜெயக்குமார், எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகர், டி.ஜெ.கோவிந்தராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x