

சென்னை: திமுக முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த க.அன்பழகனின் 4-ம் ஆண்டு நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் க.அன்பழகனின் உருவப் படத்துக்கு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அவரோடு, திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஆ.ராசா எம்.பி. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், தாயகம் கவி எம்எல்ஏ, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், க.அன்பழகனுக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் முதல்வர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: குலையா உறுதி, அசையா கொள்கை, தாழா மானம், மங்கா உணர்வு, மாறா நட்பு, மறையாப் புகழ் என இனி வரும் இயக்கத்து இளைஞர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாய் வாழ்ந்த க.அன்பழகன் நினைவுநாள்.
கோபாலபுரம் இளைஞர் திமுக காலம் முதல் பொதுக்குழுவில் என்னை கட்சித் தலைவராக அறிவித்தது வரை என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அவர் நிறைந்திருக்கிறார். என் நெஞ்சில் என்றும் நீங்காதிருப்பார். அவர்தம்கொள்கைப் பெருவாழ்வு நம்மை வழிநடத்தும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதே போல், திமுக இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், பெரியார், முன்னாள் முதல்வர் மறைந்த அண்ணாதுரை வழி வந்த கொள்கை முழக்கம், முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் உற்ற நண்பர், கட்சித் தலைவரின் அன்புக்குரிய வழிகாட்டிக.அன்பழகனின் 4-ம் ஆண்டு நினைவு நாள்.
பகுத்தறிவு, சுயமரியாதை, சமூக நீதி, தமிழர் ஏற்றம்உள்ளிட்ட திராவிட இயக்க கொள்கைகளை தன் கடைசி மூச்சு உள்ளவரை அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்த்த அவரது புகழைபோற்றுவோம். அவர் வழியில் அயராது உழைத்து, இந்தியாவின் அடையாளத்தையும், தமிழகத்தின் உரிமைகளையும் நாட்டை பிளவுபடுத்தும் பாசிச சக்திகளிடமிருந்து மீட்டெடுப்போம் என தெரிவித்துள்ளார்.