Published : 08 Mar 2024 05:32 AM
Last Updated : 08 Mar 2024 05:32 AM

குடியிருப்பு நலச் சங்கங்கள் ஒத்துழைப்புடன் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை செயல்படுத்த முடிவு: பொது சுகாதாரத் துறை இயக்குநர்

சென்னை: சென்னை, கோவை உள்ளிட்ட நகர்ப்புறங்களில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்துக்கு மக்கள் ஒத்துழைப்பு தராததால், குடியிருப்பு நலச் சங்கங்கள் ஒத்துழைப்புடன் அத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.

தமிழக சுகாதாரத் துறையின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் கடந்த 2021-ம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில், பயனாளிகளின் இல்லங்களுக்குச் சென்று முக்கியமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.

உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்துகளை வழங்குதல், நோய் ஆதரவு மற்றும் இயன்முறை சிகிச்சை சேவைகள் வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான வசதிகளை வழங்குதல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.

இதுவரை 67.30 லட்சம் உயர் ரத்த அழுத்த நோயாளிகள், 36.50 லட்சம் சர்க்கரை நோயாளிகள், இரு பாதிப்புகளும் உள்ள 31.3 லட்சம் நோயாளிகள் உள்பட மொத்தம் 1.40 கோடி இணை நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாதந்தோறும் மருந்துகள், டயாலிசிஸ், இயன்முறை சிகிச்சைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

கிராமப்புறங்களில் இந்த சேவை தங்கு தடையின்றி தொடர்ந்தாலும், நகர்ப்புறங்களில் அதை செயல்படுவதில் சில சிக்கல்கள் நீடித்து வருகின்றன. அதனால், குடியிருப்பு நலச் சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள், சமூகநல அமைப்புகளின் ஒத்துழைப்பை பெறுவதற்கு பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள், உயர் பாதுகாப்பு குடியிருப்புகளில் வசிப்பவர்கள், சுகாதாரத் துறையினருக்கு போதிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை. பெரும்பாலான இடங்களில் குடியிருப்புகளுக்குள் செல்வதற்கே அனுமதி மறுக்கப்படுகிறது. அதனால், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் செயல்பாடுகள் நகர்ப்புறத்தில் பெரிய அளவில் இல்லை.

எனவே, சுகாதாரத் துறைக்கு குடியிருப்போர் நலச் சங்கத்தினர் உதவ முன்வர வேண்டும். தங்களது பகுதிக்கு உட்பட்ட குடியிருப்புவாசிகளிடம் பேசி, இதற்கு ஒத்துழைப்பு வழங்க வகைசெய்ய வேண்டும்.

அதன்படி, குடியிருப்புவாசிகளை ஒருங்கிணைத்த பிறகு, ‘104’ என்ற சுகாதாரத் துறை எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிவித்தால், சம்பந்தப்பட்ட இடத்துக்கு சுகாதாரத் துறையினர் நேரில் சென்று இணைநோய் பாதிப்பு உள்ளவர்கள் விவரங்களை திரட்டி, தேவையானவர்களுக்கு சிகிச்சை வழங்குவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x