Published : 08 Mar 2024 06:10 AM
Last Updated : 08 Mar 2024 06:10 AM

சனாதன தர்மத்துக்கு எதிராக உதயநிதி, ஆ.ராசா பேசியது வெறுப்பு உணர்வை தூண்டக்கூடியது: உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் விரிவான தீர்ப்பு

சென்னை: சனாதன தர்மத்துக்கு எதிராக அமைச்சர் உதயநிதி, ஆ.ராசா எம்.பி. தெரிவித்த கருத்துகள், சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தக்கூடியது மட்டுமின்றி, ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிரான வெறுப்பு உணர்வையும் தூண்டக்கூடியது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் தனது விரிவான தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் கடந்த ஆண்டு நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா எம்.பி. ஆகியோர் சனாதன தர்மத்துக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தனர். இக்கூட்டத்தில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் பங்கேற்றார்.

இதையடுத்து, இவர்கள் 3 பேரும் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கின்றனர் என்று விளக்கம் கேட்டும், அவர்களை பதவி நீக்கம் செய்யக் கோரியும் இந்து முன்னணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ-வாரன்டோ மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து நீதிபதி அனிதா சுமந்த் பிறப்பித்துள்ள விரிவான தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

சனாதன தர்மம் என்பது மக்களை ஒருங்கிணைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட விதிகள்தானே தவிர, மக்களை பிளவுபடுத்தும் நோக்கத்துக்காக அல்ல. நாட்டில் சாதிய பிரிவினைவாதங்கள் நூற்றாண்டைக்கூட தாண்டாத நிலையில், அதற்காக ஒட்டுமொத்தமாக வர்ணாசிரம கொள்கையை குறைகூற முடியாது.

ஆனால், சனாதன தர்மத்துக்கு எதிராக அமைச்சர் உதயநிதி, ஆ.ராசா எம்.பி. ஆகியோர் தெரிவித்த கருத்துகள், சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தக்கூடியது மட்டுமின்றி, ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிரான வெறுப்பு உணர்வையும் தூண்டக்கூடியது. அந்த பேச்சுகள் அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானவை, பிழையானவை.

ஜனநாயக நாடான இந்தியாவில்உள்ள அனைத்து குடிமக்களுக்கும் சுதந்திரம் சமமானது என அரசியலமைப்பு சட்டம் வலியுறுத்தும் வேளையில், மக்களிடம் வெறுப்பு மற்றும் பிரிவினையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு இயந்திரம் ஈடுபடுவது ஆபத்தானது.

அரசியல் சாசன பதவி வகிப்பவர்கள் தங்கள் சொந்த மக்கள் பின்பற்றும் ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையை ஒழிப்பதாக பேச முடியாது. கருத்து சுதந்திரம் என்பது அரசியல் சாசனத்துக்கு எதிராகவோ அல்லது குறிப்பிட்ட மத நம்பிக்கைக்கு அவதூறு பரப்பும் வகையிலோ பேச, அரசியல் சாசன பதவி வகிப்பவர்களுக்கு அளிக்கப்பட்ட ஒப்புதல் அல்ல.

சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என இவர்கள் பேசியதுமதச்சார்பின்மை மீது இவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மீறும் செயல். பொதுவாக, மக்களின் உயர்வுக்கான வழிகாட்டு விதிதான் சனாதன தர்மம். அதன்படி மக்களை ஒருங்கிணைப்பதற்கான பணிகளில்தான் தலைவர்கள் ஈடுபட வேண்டும். தற்போது சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மை நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டும்.

வர்ணாசிரமம் என்பது பிறப்பின் அடிப்படையில் பிரிவினையை உருவாக்கவில்லை. தொழிலின் அடிப்படையில்தான் சமூகத்தை பிரித்துள்ளது. இன்றைய சமூகத்துக்கு அது பொருந்துமா, பொருந்தாதா என்பதுவிவாதத்துக்கு உரியது. அதேநேரம், ரிக் வேதம் சொல்லும் பழமையான வர்ணாசிரம தர்மத்தின் மீதும் பழிபோட முடியாது. ஆனால், சனாதன தர்மத்தை தவறுதலாக வர்ணாசிரம தர்மத்துடன் ஒப்பிட்டுபேசியது ஏற்புடையது அல்ல.

மாநிலத்தில் நிலவும் சாதி ரீதியிலான பிரிவினையை ஒழிக்க,அதிகாரத்தில் இருப்பவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, அதற்கு ஆதரவாக ஒருபோதும் பேசக் கூடாது. குறிப்பாக, விமர்சனங்கள் வளர்ச்சிக்கு அவசியமானது என்றாலும், அவை ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும்.

கடந்தகால நியாயமற்ற அநீதிகளை சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் சாதிய சமத்துவமின்மையும் ஒழிக்கப்பட வேண்டும். யார் எந்த நம்பிக்கையை பின்பற்றினாலும், தர்மத்தை யார் காக்கின்றனரோ அவர்களை தர்மம் காக்கும். இவ்வாறு நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x