Published : 19 Feb 2018 07:26 AM
Last Updated : 19 Feb 2018 07:26 AM

அரசியல் பயணம் தொடங்குவதை முன்னிட்டு கருணாநிதி, ரஜினியுடன் கமல் சந்திப்பு: கட்சி கொள்கையில் திராவிடம் இருக்கும் என அறிவிப்பு

அரசியல் பயணம் தொடங்கவுள்ள நடிகர் கமலஹாசன், திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரை நேற்று சந்தித்துப் பேசினார். தனது கட்சிக் கொள்கையில் திராவிடம் இருக்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை நாளை மறுநாள் (பிப்.21) ராமேசுவரத்தில் இருந்து தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து, தமிழகத்தின் முக்கியத் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசி வருகிறார். முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு ஆகியோரை கமல் சந்தித்துப் பேசினார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் தனிச் செயலாளராக இருந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி செல்வராஜும் கமலை சந்தித்தார்.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நேற்றிரவு கமல்ஹாசன் சந்தித்தார். இரவு 8.15 மணியளவில் கோபாலபுரம் வந்த கமல்ஹாசனை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்று அழைத்துச் சென்றார். சுமார் 20 நிமிடம் இந்த சந்திப்பு நீடித்தது. அதன்பிறகு, நிருபர்களிடம் கமல்ஹாசன் கூறும்போது, ‘‘எனது அரசியல் பயணத்துக்காக கருணாநிதியிடம் வாழ்த்து பெறவே அவரை சந்தித்தேன். நான் செல்லும் பாதை குறித்து அவரிடம் தெரிவித்தேன். என்னுடைய கட்சி கொள்கையிலும் திராவிடம் இருக்கும்’’ என்றார்.

ரஜினிக்கு அழைப்பு

முன்னதாக நேற்று மதியம் போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினிகாந்தை கமல் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு அரை மணி நேரம் நீடித்தது. கமல்ஹாசனை வாசல் வரை வந்து ரஜினிகாந்த் வழியனுப்பிவிட்டுச் சென்றார்.

பின்னர் நிருபர்களிடம் கமல்ஹாசன் கூறும்போது, ‘‘எனது வாழ்க்கையில் முக்கியமான பயணத்தை ஆரம்பிக்கப் போகிறேன். இந்த மாதிரியான முடிவெடுத்தபோதும் ரஜினிகாந்தை சந்தித்து சொன்னேன். இந்த பயணத்துக்கு செல்வதற்கு முன்பு எனக்கு பிடித்தவர்களிடத்தில் சொல்லிவிட்டுப் போக வேண்டும் என்று நினைத்தேன். அதன்படிதான் ரஜினிகாந்தை சந்தித்தேன். எனது பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று அவரை அழைத்தேன். அதில் பங்கேற்பது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அதை நான் வற்புறுத்தக் கூடாது. நட்பு அடிப்படையிலே அவரைச் சந்தித்தேன். அரசியல் தொடர்பாக எதையும் பேசவில்லை. எங்களது நட்பு வேறு. கருத்துகள் வேறு. எங்களுக்குள் நட்புதான் பிரதான விஷயம். எனது அரசியல் பயணம் வெற்றி பெற அவர் வாழ்த்து சொன்னார்’’ என்றார்.

வெவ்வேறு பாணி

அதைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அளித்த பேட்டியில், “சினிமாவில் என்னுடைய பாணி வேறு. கமல்ஹாசன் பாணி வேறு. அரசியலிலும் அப்படித்தான் இருக்கும். மக்களுக்கு நல்லது செய்வதுதான் எங்களது பிரதான நோக்கம். அவர் அரசியல் பயணம் தொடங்குவதையொட்டி என்னை வந்து சந்தித்தார். அவர் பெயர், புகழ், பணத்துக்காக அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே அரசியலுக்கு வருவதால், அவரது பய ணம் வெற்றி பெற வாழ்த்தினேன். அவரது பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளவும் எனக்கு அழைப்பு விடுத்தார்” என்றார்.

ரஜினியும் தீவிரம்

இதற்கிடையே, அரசியல் கட்சி தொடங்குவதில் ரஜினியும் தீவிரம் காட்டி வருகிறார். முதல்கட்டமாக தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றினார். புதிய உறுப்பினர் சேர்க்கையையும் தொடங்கியுள்ளார். அத்துடன் மாவட்ட வாரியாக மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகளையும் நியமித்து வருகிறார். நீலகிரி, தூத்துக்குடி, தேனி மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திரர் கோயிலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேற்று திடீரென சென்று வழிபட்டார். அரசியல் பிரவேசத்தையொட்டி சிறப்பு பூஜை செய்ததாகக் கூறப்படுகிறது.

அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளை அறிவித்த பிறகு கட்சியின் பெயர், கொடியை அறிவித்து தீவிர அரசியலில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x