

சென்னை: திருச்செங்கோடு - ராசிபுரம் நெடுஞ்சாலை வழித்தடத்தை மாற்றி அமைக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துவிஜயராணி என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘சென்னை கன்னியாகுமரி தொழில்நகர திட்டத்தின் கிழ், அமைக்கப்பட்டு வரும் திருச்செங்கோடு- ராசிபுரம் நெடுஞ்சாலைக்கான வழித்தடத்தை மாற்றி அமைக்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, நெடுஞ்சாலையின் சில இடங்களில் வழித்தடத்தை மாற்றி அமைக்க வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து முத்துவிஜயராணி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமார் ஆஜராகி, திருச்செங்கோடு - ராசிபுரம் நெடுஞ்சாலை வழித்தடத்தில் 95% பணிகள் நிறைவடைந்து விட்டது. வரும் ஜூன் மாதம் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விடும்.
இதற்காக நபார்டு வங்கி மூலம் 440 கோடி ரூ ஒதுக்கீடு செய்யப்பட்டது. வழித்தடத்தை மாற்றி அமைத்தால் அரசுக்கு கூடுதல் சுமை ஏற்படும். இத்திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டால், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சாலையை கொண்டு வரமுடியாத சூழல் உருவாகும்’ என்று தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்துகொண்ட தலைமை நீதிபதி அமர்வு, திருச்செங்கோடு - ராசிபுரம் நெடுஞ்சாலை வழித்தடத்தை மாற்றியமைக்க கோரிய மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.