

தென்காசி: ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன் கோவில், ஆலங்குளம், அம்பாசமுத்திரம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள், தென்காசி மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றிருந்தன.
தொகுதி மறு சீரமைப்புக்கு பின்னர் அம்பாசமுத்திரம், ஆலங்குளம் தொகுதிகள் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியுடன் சேர்க்கப்பட்டன. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் தொகுதிகள் தென்காசி மக்களவைத் தொகுதியில் சேர்க்கப்பட்டன.
கடந்த 2019-ம் ஆண்டு தென்காசி மாவட்டம் உருவான நிலையில் முதல் மக்களவைத் தேர்தலை தென்காசி தொகுதி சந்திக்கிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் (தனி), சங்கரன்கோவில் (தனி), மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிகள் தென்காசி மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
1957, 1962-ம் ஆண்டு தேர்தல்களில் பொதுத் தொகுதியாக இருந்த தென்காசி மக்களவைத் தொகுதி, அதன் பின்னர் இப்போது வரை 60 ஆண்டுகளுக்கு மேலாக தனித் தொகுதியாக உள்ளது. இங்கு காங்கிரஸ் தொடர்ச்சியாக 9 முறையும், அதிமுக 3 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் 2 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ், திமுக தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
5 முறை காங்கிரஸ் சார்பிலும், ஒரு முறை தமாகா சார்பிலும் வெற்றிபெற்ற எம்.அருணாச்சலம் மத்திய அமைச்சராக பதவி வகித்தார். வருகிற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என இதுவரை நான்குமுனை போட்டி உறுதியாகியுள்ளது.
தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் பல கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யாத நிலையில், தென்காசி தனித்தொகுதியில் தேர்தல் பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. பிரதான கட்சிகள் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்கள் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.