

அதிமுக சார்பில் மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பல்வேறு கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுகவின் தொகுதி பங்கீட்டு குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்தித்து, வரும் மக்களவைத் தேர்தலில் கட்சியின் முழு ஆதரவை அளிப்பதாக தெரிவித்தனர்.
அவர்களுக்கு பழனிசாமி நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பில், அதிமுக கூட்டணியில் பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்குமாறு கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவில் அமைக்கப்பட்டுள்ள குழுவை சந்தித்து பேசுமாறு பழனிசாமி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.