

கன்னியாகுமரியில் போட்டியிடுவது குறித்து தான் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என விஜயதரணி தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் விஜயதரணி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக நான் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கட்சி தலைமை எடுக்கும் முடிவை ஏற்று நான் செயல்படுவேன். கட்சி தலைமை எனக்கு உரிய அங்கீகாரம் அளிப்பதாக உத்தரவாதம் அளித்திருக்கிறார்கள்.
பாஜக கட்சி உறுப்பினராக இருக்கும் நான், சொல்ல வேண்டிய இடத்தில் எனது கருத்தை கூறியிருக்கிறேன். பெண்களுக்கு தலைமை பண்பு இருப்பதை நம்பாத ஒரு கட்சியில் இருந்து நான் வெளியேறியிருக்கிறேன். உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை காங்கிரஸ் தரவில்லை.
தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி பல விஷயங்களை செய்துள்ளார். அந்த வகையில், கட்சி பணியில் பாஜக என்னை முழுமையாக ஈடுபடுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனக்கு கொடுக்கும் பணி, நிச்சயம் மக்கள் பணியாகதான் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.