சாருபாலா தொண்டைமான் மகள் பாஜகவில் இணைந்தார்
புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர் சாருபாலா தொண்டைமான். திருச்சி மாநகராட்சி மேயராக 2 முறை பதவி வகித்த இவர், காங்கிரஸ், தமாகா கட்சிகளில் முக்கியப் பொறுப்பு வகித்தவர். இதன்பின் 2016-ல் அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின், டிடிவி.தினகரனின் அமமுகவில் சேர்ந்தார். இப்போது அக்கட்சியின் அமைப்புச் செயலாளராக உள்ளார்.
இவரது மகன் பிருத்விராஜ் (36), மகள் ராதா நிரஞ்சனி (34) ஆகியோர் துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றுள்ளனர். இதில், ராதா நிரஞ்சனி கொடைக்கானலில் உள்ள பூர்வீக சொத்துகள், தொழில்களை கவனித்து வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சித் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
இதுகுறித்து ராதா நிரஞ்சனி ‘இந்துதமிழ் திசை’ நாளிதழிடம் கூறியது: அம்மா (சாருபாலா) தேர்தலில் போட்டியிட்டபோது நான் அவருக்காக தேர்தல் பணியாற்றி உள்ளேன். அப்போது எந்தக் கட்சியிலும் சேரும் யோசனை இல்லை.
சமீப காலமாக அரசியலில் ஈடுபடலாம் என யோசித்தபோது, பாஜகவின் கொள்கைகளும், செயல்பாடுகளும் என்னை கவர்ந்தன. அண்மையில் காசிக்கு சென்றபோது, அங்கு மோடிக்கும், பாஜகவுக்கும் இருந்த செல்வாக்கு மற்றும் ஈர்ப்பு என்னை சிந்திக்க வைத்தது.
மேலும் மாநிலத் தலைவர் அண்ணாமலை செயல்பாடுகளுக்கு தமிழக இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் பாஜகவில் இணைய முடிவு செய்து, அப்பா-அம்மாவிடம் தெரிவித்து, ஆசி பெற்று பாஜகவில் இணைந்தேன். என்னுடன் அமமுக பாசறை துணை செயலாளர் காசி மகேந்திரனும் இணைந்தார். கொடைக்கானலில் இருந்தாலும், புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் ஈடுபட அதிக ஆர்வத்துடன் உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து அமமுக அமைப்புச்செயலாளர் சாருபாலா தொண்டைமானிடம் கேட்டபோது, ‘‘எனது மகள் பாஜகவில் இணைந்தது அவரது தனிப்பட்ட விருப்பம். அவருக்கு பிடித்ததால் அக்கட்சியில் இணைந்துள்ளார். வாழ்த்துகள்’’ என்றார்.
திமுக எம்எல்ஏ குடும்ப உறுப்பினர் உட்பட 5 பேர் இணைந்தனர்: திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவரும், கல்வி மற்றும் சமூக பணியாற்றி வரும் சமூக சேவகருமான கே.பி.கே.செல்வராஜ், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜஸ்வீர் சிங் பஜாஜ், திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் மனைவியின் சகோதரி சாந்தி மற்றும் இம்பா அமைப்பின் நிர்வாகிகள் ஸ்வப்னா பாபு, பாபு ஆகியோர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
