

சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளை பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஜெ.தீபா இன்று (வெள்ளிக்கிழமை) காலை புகார் அளித்தார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அவரது அண்ணன் மகளான ஜெ.தீபா தனியாக கட்சி தொடங்கினார். அவரது கட்சிக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்று பெயரிட்டார்.
ஆரம்பத்தில் அவர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவாக பேசிவந்தார். பின்னர் யாருக்கும் ஆதரவு இல்லை என்றார். இவ்வாறாக அடிக்கடி தனது அரசியல் நிலைப்பாட்டினை மாற்றினார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறினார்.
இதுமட்டுமல்லாமல், ஒருமுறை போயஸ் கார்டன் இல்லத்தில் தனது சகோதரர் தீபக்குடன் தகாத வார்த்தைகளைப் பேசி பொதுவெளியில் சண்டையிட்டார். இது ஊடகங்களில் ஒளிபரப்பானது. இதுபோன்ற நடவடிக்கைகளால், ஜெ.தீபாவை நெட்டிசன்கள் கிண்டல் செய்வது அதிகரித்தது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளை பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஜெ.தீபா இன்று (வெள்ளிக்கிழமை) காலை புகார் அளித்தார்.
மேலும், சசிகலா, டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தன்னை மிரட்டுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
தீபாவுடன் அவரது வழக்கறிஞரும் வந்திருந்தார்.