Published : 07 Mar 2024 05:53 AM
Last Updated : 07 Mar 2024 05:53 AM

`நீங்கள் நலமா’ திட்டம் குறித்து இபிஎஸ் - அமைச்சர் டிஆர்பி ராஜா சமூக வலைதளத்தில் மோதல்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் நீங்கள் நலமா என்ற திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் நாங்கள் நலமாக இல்லை என்று சமூகவலைதளத்தில் தெரிவிக்க, அதற்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலளித்துள்ளார்.

தமிழக அரசின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளின் கருத்துகளை கேட்கும் வகையில் நீங்கள் நலமா என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இத்திட்டம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தனது சமூக வலைதள பக்கத்தில், நீங்கள் நலமா என்று கேட்கும் மு.க.ஸ்டாலின் அவர்களே, நலத் திட்டங்கள் நின்று போச்சு, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போச்சு, சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உயர்ந்தாச்சு, விலைவாசி விண்ணைத் தொட்டாச்சு, எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு தமிழகம் ஆளாச்சு. இப்படி, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட உங்கள் ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை. நாங்க நலமா இல்லை ஸ்டாலின்’’ என தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்ட சமூக வலைதளப் பக்கத்தில்,‘‘எதிர்க்கட்சித்தலைவர் தான் நலமாக இல்லை என்று முதல்வருக்கு முறையிட்டுள்ளார். விவசாயிகளை வஞ்சித்த வேளாண் சட்டங்களுக்கு முட்டுக் கொடுத்த , பதவியை காப்பாற்ற பாஜகவுடன் சேர்ந்து தமிழகத்துக்கு பச்சை துரோகம் செய்த , தூத்துக்குடியில் மக்களை குருவிகளைபோல சுட்டுத் தள்ளிய ஆட்சி நடத்திய, பொள்ளாச்சி இளம்பெண்களை சீரழித்த கொடூரன்களுக்கு பாதுகாப்பு அளித்த, சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான சிஏஎவுக்கு ஆதரவளித்த, கரோனாவில் பிளீச்சிங் பவுடர் வரை கொள்ளையடித்த ஆட்சி நடத்திய, கட்சித் தலைவி வாழ்ந்த கொடநாட்டிலேயே கொலையும், கொள்ளையும் நடக்கவிட்ட நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்.

உங்களின் இருண்ட ஆட்சியில் இருந்து விடுபட்டு விடியல் ஆட்சி கண்ட தமிழக மக்கள், திராவிட மாடல் ஆட்சியில் இன்றும், என்றும் நலமாகவே இருப்பார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x