முழுமை அடையும் தருவாயில் அத்திக்கடவு - அவிநாசி திட்டம்: ஆ.ராசா தகவல்

முழுமை அடையும் தருவாயில் அத்திக்கடவு - அவிநாசி திட்டம்: ஆ.ராசா தகவல்
Updated on
1 min read

திருப்பூர்: அத்திக்கடவு-அவிநாசி திட்டம் முழுமை அடையும் தருவாயில் உள்ளதாக, நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார். நீலகிரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருமுருகன்பூண்டி நகராட்சி மற்றும் அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருமுருகன்பூண்டியில் நேற்று நடைபெற்றது.

இதில் நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா பங்கேற்று, அனைத்து அரசுத் துறை அலுவலர்களுடன் கலந்துரையாடினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஏற்கெனவே ரூ.50 கோடிக்கும் மேலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அவிநாசி, திருமுருகன்பூண்டி ஆகிய பகுதிகளுக்கு இரண்டாவது கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

நான்காவது கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவுபெறும் பட்சத்தில் குடிநீர் தேவை பூர்த்தியடையும். அத்திக்கடவு-அவிநாசி திட்டம் முழுமை அடையும் தருவாயில் உள்ளது.

முதற்கட்ட பணிகள் முழுமை அடைந்து திறப்பு விழா முடிந்த பின்பு, விடுபட்ட இடங்களை சேர்க்க அறிக்கை தயாரித்து அரசுக்கு அளிக்கப்படும். நீலகிரி தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை முடிவு எடுக்கும்.

ஆனால் விருப்பமனு தாக்கல் செய்வது என் உரிமை, என்றார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் க.செல்வராஜ், மேயர் ந.தினேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in