

கரூர்: கரூர் அருகே அடிப்படை வசதிகள் கோரி வடக்குப்பாளையம் குமரன் குடில் பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் அருகேயுள்ள மேலப்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த வடக்குப் பாளையம் பகுதியைச் சேர்ந்தது குமரன் குடில், லே அவுட், விஸ்தரிப்பு பகுதிகள். இப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு கோரிக்கை வைத்து வந்தனர். இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கழிவுநீர் வடிகால், தார் சாலை, நாள்தோறும் குப்பைகள் பெற வேண்டும் என வலியுறுத்தியும் அப்பகுதியில் குப்பைக் கிடங்கு அமைக்கப்படுவதை கண்டித்தும் தேர்தல் புறக்கணிப்பதாக அவர்கள் வசிக்கும் பகுதியில் இன்று (மார்ச் 6 ) பதாகை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த ஊராட்சி நிர்வாகம் மற்றும் பசுபதி பாளையம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாந்தோணிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா, பசுபதி பாளையம் இன்ஸ்பெக்டர் முத்துகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 10 நாட்களில் கோரிக்கை நிறைவேற்றி தரப்படும் என அளித்த உறுதிமொழியின் பேரில் 3 மணி நேர போராட்டத்தை கைவிட்டு விலக்கிக் கொண்டனர். ஆனால் பணிகளை தொடங்கியப் பின்பே பதாகை அகற்றுவோம் எனக் கூறி பதாகை அகற்ற மறுத்துவிட்டனர்.