மதுரைக்கு வேட்பாளரை தேடும் அதிமுக: நழுவும் முக்கிய நிர்வாகிகள்
மதுரை: முன்னாள் முதல்வரான ஜெயலலிதா, அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்தவரை எந்தத் தேர்தலாக இருந்தாலும் போட்டியிட நமக்கு வாய்ப்புக் கிடைக்காதா? என்ற ஏக்கம் கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் முதல் கடைக்கோடி தொண்டர்கள் வரை இருந்தது.
2014 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு மோடியா? லேடியா? என்ற முழக்கத்துடன் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் செய்து 39 தொகுதிகளிலும் வெற்றிக்கனியைப் பறித்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அக்கட்சி பல அணிகளாகப் பிரிந்ததோடு அதிமுகவின் முன்பிருந்த செல்வாக்கும் சரிந்தது. தற்போது கட்சியும், சின்னமும் பழனிசாமி தலைமையிலான அதிமுகவிடம் இருந்தாலும், மக்களவைத் தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் நிர்வாகிகள், தொண்டர்களிடம் தேர்தல் பரபரப்பே இல்லை.
பழனிசாமி, தனியார் முகமை ( ஏஜென்ஸி ) மூலம் தொகுதிக்கு இரண்டு அல்லது மூன்று நபர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் வேட்பாளராக போட்டியிடுவதற்காக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மதுரை மக்களவைத் தொகுதிக்கு அமைப்புச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யன், மாநகராட்சி அதிமுக எதிர்கட்சித் தலைவர் சோலை ராஜா, மருத்துவர் சரவணன் ஆகியோர் வேட்பாளர் பட்டியலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ராஜ்சத்யன், சோலை ராஜா இருவரும் மொத்த செலவையும் ஏற்று தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டுகின்றனர். அதனால், சமீபத்தில் கட்சியில் சேர்ந்த மருத்துவர் சரவணனை போட்டியிட வைக்க முயற்சி நடப்பதாகக் கூறப்படுகிறது. அவர் பல கட்சிகளுக்குச் சென்று வந்தவர் என்பதால் அதிமுக தொண்டர்களுக்கு விருப்பமில்லை என்றா லும் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு பொருளாதாரரீதியில் அவரை நிறுத்துவற்கு கட்சித் தலைமை ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் யாரேனும் போட்டியிட விரும்பி கட்சித் தலைமை எதிர்பார்க்கும் தேர்தல் செலவை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் கடைசி நேரத்தில் அவருக்கு வாய்ப்பளிக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. மதுரை மட்டுமில்லாது தமிழகம் முழுவதுமே இதே நிலைதான் அதிமுகவில் நிலவுகிறது. மக்களவைத் தேர்தலுக்கு பலமான கூட்டணியை அமைப்பதோடு வேட்பாளர்கள் மேல் அனைத்துச் செலவையும் சுமத்தாமல் கட்சியில் இருந்து நிதி வழங்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.
பழனிசாமி தலைமையில் அதிமுக தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வருவதாக ஏற்கெனவே ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் போன்றோர் குற்றம்சாட்டும் நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த மக்களவைத்தேர்தல் அதிமுகவுக்கும் அதன் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கும் சவாலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
அதிமுகவில் பொருளாதார வசதி இல்லாவிட்டாலும் ஜெயலலிதா கைகாட்டும் நபர்களுக்கு சீட் வழங்கப்பட்டு அவர்களது தேர்தல் செலவை கட்சி ஏற்று, அவரை வெற்றிபெற வைக்க நிர்வாகிகள் தீவிர தேர்தல் பணியாற்றியதுண்டு. வெற்றிபெற வைக்க முடியாவிட்டால் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் அமைச்சர், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்களுக்கு சிக்கல் ஏற்படும். அதனால், சொந்தப் பணத்தை போட்டு தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள்.
மற்ற கட்சிகளைப் போல் இல்லாமல் இவர்தான் இந்தத் தொகுதிக்கு வேட்பாளர் என அதிமுவினரே கணிக்க முடியாது. அந்தளவுக்கு வேட்பாளர் தேர்வு ரகசியமாகவும், எதிர்பாராத வகையிலும் இருக்கும். அப்படி அதிமுகவில் கடைக்கோடியில் எந்த அரசியல் பின்னணியும், மக்கள் செல்வாக்கும், பொருளாதார வசதியும் இல்லாதவர்கள் ஜெயலலிதாவால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளார்கள். அதனால், அதிமுகவில் சேருவதற்கு இளைஞர்கள், மாற்றுக்கட்சியினர் அதிக ஆர்வம் காட்டினர். இந்த ஆர்வம், அக்கட்சியை மிகப்பெரிய கட்சியாக தமிழகத்தைத் தாண்டி தேசிய அளவில் கவனிக்க வைத்தது.
