மு.மேத்தா, சொ.சேதுபதிக்கு கவிஞர் சிற்பி அறக்கட்டளை விருது

மு.மேத்தா, சொ.சேதுபதிக்கு கவிஞர் சிற்பி அறக்கட்டளை விருது
Updated on
1 min read

கவிஞர் சிற்பி அறக்கட்டளை ஆண்டுதோறும் தமிழ்க் கவிஞர்களுக்கு விருதும் பரிசும் அளித்துப் பாராட்டி வருகிறது. இந்த ஆண்டு ‘கவிஞர் சிற்பி விருது’ கவிஞர் மு.மேத்தாவுக்கு வழங்கப்படுகிறது. இவர் ‘கண்ணீர்ப் பூக்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தவர். தமிழக அரசின் பரிசு பெற்ற கவிதைத் தொகுப்பான ‘ஊர்வலம்’ மற்றும் ‘திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்’, ‘நந்தவன நாட்கள்’, ‘வெளிச்சம் வெளியே இல்லை’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளைத் தந்துள்ளார். ‘ஆகாயத்துக்கு அடுத்த வீடு’ என்ற தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர். சிறுகதை, புதினம் மட்டுமின்றி, திரைப்படப் பாடல்களும் எழுதியுள்ளார். இவருக்கு ரூ.30 ஆயிரம் பரிசும் பாராட்டுப் பட்டயமும் வழங்கப்படுகிறது.

சிறந்த கவிஞருக்கான விருதைப் பெறுபவர் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரித் தமிழ்த் துறைப் பேராசிரியர் கவிஞர் சொ.சேதுபதி. ‘கனவுப் பிரதேசங்களில்’, ‘குடைமறந்த நாளின் மழை’, ‘வனந்தேடி அலையும் சிறுமி’, ‘சீதாயணம்’, ‘சாம்பலுக்குப் பின்னும் சில கனல்கள்’ உட்பட 8 கவிதைத் தொகுப்புகள், 2 குழந்தைப் பாடல் தொகுப்புகளை எழுதி உள்ளார். கவிதை நாடகங்கள், ஆய்வு நூல்கள், சிறுகதை, தொகுப்பு நூல்கள் என 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருக்கு ரூ.15 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது.

சமூக நற்பணிக்கான பி.எம்.சுப்பிரமணியம் விருது, புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ண மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. பழம்பெரும் நூல்கள், இதழ்கள் முதலியவற்றைப் பாதுகாத்து ஆய்வாளர்களுக்கு அளித்து வரும் ஆவணக்காப்பாளர் மற்றும் ஆய்வாளரான இவருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது.

பொள்ளாச்சியில் பாரதிய வித்யாபவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை யில் ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப் படுகின்றன. தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சிலம்பொலி செல்லப்பன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in