புதுவை | சிறுமி கொலைக்கு காவல்துறைதான் பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி

அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்
அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: புதுவை சிறுமி கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது "எக்ஸ்" பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "புதுவை மாநிலம் முத்தியால்பேட்டையில் 9 வயது சிறுமி கடத்தி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மகளிர் நாள் நாளை மறுநாள் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், வெளியுலகம் அறியாத பிஞ்சு உள்ளத்துக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமையை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது.

சிறுமியை சீரழித்தவர்கள் அவரது வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் தான். சிறுமி காணாமல் போனது குறித்து அவரது குடும்பத்தினர் இரு நாட்களுக்கு முன்பாகவே புகார் அளித்துள்ளனர். புகார் கிடைத்த உடனே காவல் துறை நடவடிக்கை எடுத்திருந்தால் சிறுமியை பத்திரமாக மீட்டிருக்க முடியும். ஆனால், சிறுமியை தேடிக் கண்டுபிடிக்க காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காதது தான் அச்சிறுமி சிதைத்து படுகொலை செய்யப்பட்டதற்கு காரணம். அந்த வகையில் இந்தக் கொடுமைக்கு காவல் துறை தான் பொறுப்பேற்க வேண்டும்.

புதுவை மாநிலம் முழுவதும் கஞ்சா பயன்பாடு தலைவிரித்தாடுகிறது. சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் முதியவர் ஒருவர் மது போதைக்கும், 19 வயது இளைஞர் கஞ்சா போதைக்கும் அடிமையானவர்கள் என்று விசாரணையில் தெரியவந்திருக்கிறது. புதுவையில் பல இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான குற்றங்களுக்கும் கஞ்சா தான் முதன்மைக் காரணமாக உள்ளது. கஞ்சா நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய வகையிலும் இந்தக் குற்றத்திற்கு காவல் துறை தான் பொறுப்பேற்க வேண்டும்.

9 வயது சிறுமியின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கும், அவர்களுக்கு பின்னணியில் இருப்பவர்களுக்கும் சட்டப்படி தூக்குத் தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனை பெற்றுத் தர புதுவை மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் குற்றத்தைத் தடுக்கத் தவறிய முத்தியால்பேட்டை காவல் நிலைய காவல் துறையினர் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்." என அன்புமணி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in