Published : 06 Mar 2024 05:43 AM
Last Updated : 06 Mar 2024 05:43 AM
சென்னை: தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்து திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், கூட்டணி கட்சிகள் உடனான இடப்பகிர்வை நாளைக்குள் முடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டை பொருத்தவரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், ஐயூஎம்எல், கொமதேக கட்சிகளுக்கு தலா 1 தொகுதி என உடன்படிக்கை முடிந்துவிட்டது. காங்கிரஸ் தரப்பில் கடந்த முறை போலவே, தமிழகம் 9,புதுச்சேரி 1 என மொத்தம் 10 தொகுதிகள் தரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதனால் முதல்கட்ட பேச்சுவார்த்தையுடன் நிற்கிறது.
மதிமுக 2, விசிக 3 தொகுதிகள் கேட்கின்றன. இக்கட்சிகள் 2 முறை பேசியும் உடன்படிக்கை எட்டப்படவில்லை. இதுதவிர கமல்ஹாசனின் மநீம கட்சிக்கும் ஒரு தொகுதி தரவேண்டி உள்ளது.
இந்த சூழலில், மயிலாடுதுறை பயணத்தை முடித்து, நேற்று முன்தினம் சென்னை திரும்பிய முதல்வர், நேற்று காலை அண்ணா அறிவாலயம் வந்தார்.அங்கு, அமைச்சர் துரைமுருகன், பொருளாளரும், தொகுதி பங்கீட்டு குழு தலைவருமான டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர் கனிமொழி மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
இதில், கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகள் எண்ணிக்கை, அவற்றில் திமுக வழங்க உள்ள தொகுதிகள், எந்தெந்த தொகுதியை யாருக்கு வழங்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அப்போது, வரும் 7-ம் தேதிக்குள் (நாளை) தொகுதி பங்கீட்டை முடிக்குமாறு டி.ஆர்.பாலுவுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தேர்தல் அறிக்கை தொடர்பாக பெறப்பட்ட பரிந்துரைகளை வரிசைப்படுத்தி, விரைவில் அறிக்கை தயாரிக்கவும் அறிவுறுத்திய முதல்வர், திமுகபேச்சாளர்கள் ஆலோசனை கூட்டம்தொடர்பாகவும் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இதுதவிர, போதைப் பொருள் தொடர்பான பிரதமரின் பேச்சு, அதிமுக, பாஜக கூட்டணிகள் தொடர்பாகவும் முக்கியஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
முதல்வர் ஆலோசனை நடத்தியதுகுறித்து திமுக நிர்வாகி ஒருவரிடம்கேட்டபோது, ‘‘கடந்த முறை போன்றே இந்த முறையும் தொகுதிகளை ஒதுக்கி கூட்டணியை முடிவு செய்ய முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இதன்அடிப்படையில், பெரும்பாலும் 23 தொகுதிகளில் திமுகவும், 17 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளும் போட்டியிடும். தொகுதி எண்ணிக்கையைவிட எந்த தொகுதியை வழங்குவது என்பதில்தான் சில சிக்கல்கள் உள்ளன. அதுவும் விரைவில் தீர்க்கப்பட்டு நாளைக்குள் பெரும்பாலும் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுவிடும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT