Published : 06 Mar 2024 05:54 AM
Last Updated : 06 Mar 2024 05:54 AM

அய்யா வைகுண்டர் வரலாற்றை திரித்துப் பேசுகிறார் ஆளுநர்: பாலபிரஜாபதி அடிகள் குற்றச்சாட்டு

நாகர்கோவில்/ திருநெல்வேலி: அய்யா வைகுண்டர் சனாதனத்தை ஆதரித்தவர் என்று கூறுவதை ஏற்க முடியாது என்று பாலபிரஜாபதி அடிகளார் கூறினார்.

அய்யா வைகுண்ட சாமி குறித்த நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘‘சனாதன தர்மத்துக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் ராமர், கிருஷ்ணர், வள்ளலார், அய்யா வைகுண்டர் போன்றோர் அவதரித்துள்ளனர்" என்றார். இதுகுறித்து, சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியைச் சேர்ந்த பாலபிரஜாபதி அடிகள் கூறும்போது, "உருவ வழிபாடு, மொழி பேதம், ஆண், பெண் பேதம், சாதிகள் இல்லை என பல கோட்பாடுகளைக் கூறியவர் அய்யா வைகுண்டர். அவர் சனாதனத்தை ஆதரித்தவர் என்று கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆளுநர் வரலாற்றை திரித்துப் பேசுகிறார்" என்றார்.

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில், சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு செய்தியாளர்களிடம் கூறும்போது, "அய்யா வைகுண்டர் அவதரித்த காலகட்டத்தில், கோயில் அமைந்துள்ள தெருவில்கூட எல்லோராலும் செல்ல முடியாது. சனாதன, ஆதிக்க சக்திகளுக்கு எதிராக அய்யா வைகுண்டர் கடவுள் அவதாரமாக வந்து, மக்கள் அனைவரும் சமம் என்றுகூறி, புதிய வழிமுறையைக் கொண்டுவந்தார். அவருக்கு சனாதான வாதிகளால்தான் துன்பம் வந்தது. அதை எதிர்த்துப் போராடி சமதர்மத்தை நிலைநாட்டினார். எனவே, அவரை சனாதனவாதி என்று சொன்னால் மக்கள் ஏற்க மாட்டார்கள்.

இதேபோல, வடஅயர்லாந்தில் பிறந்த கால்டுவெல் லண்டனில் படித்து, இந்தியாவுக்கு வந்தார். இந்தியாவில் 18 ஆண்டுகளில், 18 மொழிகளைக் கற்றார். உலகில் தமிழ் மொழிதான் முதலில் தோன்றியது என்றும், தமிழில் இருந்துதான் பிற மொழிகள் தோன்றின என்றும் நிரூபித்தார். இதெல்லாம் குறித்து ஆளுநர் தவறுதலாகப் பேசுகிறார்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x