போதைப் பொருள் நடமாட்டம் குஜராத்தில்தான் அதிகம்: சட்டத் துறை அமைச்சர் ரகுபதி புகார்

போதைப் பொருள் நடமாட்டம் குஜராத்தில்தான் அதிகம்: சட்டத் துறை அமைச்சர் ரகுபதி புகார்
Updated on
1 min read

நாகர்கோவில்: குஜராத் மாநிலத்தில்தான் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் உள்ளது. போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசிடம்தான் இருக்கிறது என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் இருக்கக் கூடாது என்பதற்காக, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கஞ்சா பயிரிடப்படுவதில்லை.

தென் மாநில டிஜிபிக்கள் கூட்டத்தில் தமிழக டிஜிபி கூறிய தகவல்களின் அடிப்படையில், ஆந்திராவில் 6,000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா பயிர்கள் அழிக்கப்பட்டன.

கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர் ஒருவரே கஞ்சா வியாபாரத்துக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அந்த அமைச்சர் மீது வழக்குத் தொடர ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். தமிழகத்தில் கஞ்சா கடத்தல், போதைப் பொருள் கடத்தல் குற்றங்களில் ஈடுபட்ட 16 பேர் பாஜகவில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மத்திய அரசிடம்தான்... குஜராத்தில் 1,660 கி.மீ. நீளம் கொண்ட கடற்கரை உள்ளது. அந்தப் பகுதியில்தான் போதைப் பொருள் நடமாட்டம் அதிகம் உள்ளது. போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது. மற்றவர்கள் மீது பழிபோடுவதுதான் மோடியின் ஃபார்முலா.

குற்றப் பின்னணி உள்ளவர்களைவைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. இல்லம் தேடி கல்வித் திட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் `இல்லம் தேடி குட்கா' என்று பேசியுள்ளார். அவர் மீது வழக்கு இருப்பதை மறந்துவிட்டு, இதுபோல பேசியுள்ளார்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in