Published : 06 Mar 2024 06:12 AM
Last Updated : 06 Mar 2024 06:12 AM
காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் முடிவை கைவிடக் கோரி ஏகனாபுரத்தில் நேற்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர்.
சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே பரந்தூர் பகுதியில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. இதில் ஏனகாபுரம் உள்ளிட்ட பகுதிகள் முழுவதுமாக கையகப்படுத்தப்பட உள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரத்தை மையமாக வைத்து பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கிராம சபைக் கூட்டங்களையும் புறக்கணித்து வருகின்றனர்.
இதனால் கடந்த ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தில் ஏகனாபுரத்தில் நடக்கவிருந்த கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதனைத் தொடர்ந்து கிராம சபைக் கூட்டம் வேறு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
அதன்படி அந்தக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலும் பொதுமக்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்யும்வரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT