“சின்னம் கிடைக்காவிட்டாலும் பிரச்சாரத்தை தொடங்கி விட்டோம்” - சிவகங்கை நாதக வேட்பாளர் எழிலரசி
சிவகங்கை: ‘‘சின்னம் கிடைக்காவிட்டாலும் பிரச்சாரத்தை தொடங்கி விட்டோம் ’’ என நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி விசயேந்திரன் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதமே சிவகங்கை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக எழிலரசி விசயேந்திரன் அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து அவர்கள் வீடு, வீடாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். நேற்று சிவகங்கையில் அக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கோட்டைக்குமார், ரமேசு இளஞ் செழியன், சிவகங்கை தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், மண்டலச் செயலாளர் சாயல்ராம், மாவட்டச் செயலாளர் குகன் மூர்த்தி, வேட் பாளர் எழிலரசி விசயேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் எழிலரசி விசயேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”சிவகங்கை தொகுதியில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவேன். காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவு படுத்துவேன். மணல் உள்ளிட்ட கனிமத் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுப்பேன். உள்ளூர் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். சின்னம் கிடைக்காவிட்டாலும் பிரச்சாரத்தை தொடங்கி விட்டோம். சீமான், கொடியை காட்டி ஆதரவை திரட்டி வருகிறோம்.” இவ்வாறு அவர் கூறினார்.
