

சிவகங்கை: சிவகங்கையில் பிரதமர் மோடியை கிண்டல் செய்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வடை வழங்கினார்.
சிவகங்கை அரண்மனை வாசலில் நேற்று முன்தினம் இரவு திமுக சார்பில் ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற தலைப்பில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. நகராட்சித் தலைவர் சி.எம்.துரை ஆனந்த் தலைமை வகித்தார்.
அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கே.ஆர்.பெரியகருப்பன் உள்ளிட்டோர் பேசினர். நிகழ்ச்சி தொடங்கிய போது ‘‘புயல், வெள்ளக் காலங்களில் கூட வராத மோடி, கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை 8 முறை தமிழகம் வந்துள்ளார். 10 ஆண்டுகால ஆட்சியில் சொன்னதை செய்யாமல் வாயிலே வடை சுடுகிறார்’’ எனக் கூறி அங்கிருந்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கு மோடி புகைப் படத்துடன் ‘இது மோடி சுட்ட வடை’ என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரத்தில் வடை வைத்து கொடுக்கப்பட்டது. இதை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்.