பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கியதற்கு எதிரான வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்தது ஐகோர்ட்

பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கியதற்கு எதிரான வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்தது ஐகோர்ட்
Updated on
1 min read

சென்னை: பாஜகவின் சின்னமாக தேசிய மலரான தாமரையை ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவன தலைவருமான டி.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘தேசிய மலரான தாமரையை ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி. அது நாட்டின் ஒருமைபாட்டை இழிவுபடுத்துகிறது. பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்யக் கோரி கடந்த செப்டம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்தேன்.

அந்த மனுவின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது மனுவை பரிசீலித்து, பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தாமரை தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாநில அரசுகளும் அதை மாநில சின்னமாக அறிவித்துள்ளன.

மேலும், தாமரை ஒரு மதச் சின்னம் என்பதால், பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கியது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படியும், சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின்படியும் தவறு. மேலும், அரசு சின்னங்களில் தாமரை இடம் பெற்றுள்ளதால் இது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகும் என்று வாதிடப்பட்டது.

இந்த வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in