

நெய்வேலி: நெய்வேலி என்எல்சி இந்திய லிமிடெட் நிறுவனம் சார்பில் திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள கணவனை இழந்த 2000 பெண்களுக்கு ரூ. 2 கோடி மதிப்பீட்டில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது. தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தையல் இயந்திரங்களை வழங்கினார். முன்னதாக, விழாவில் பேசும்போது தனது மனைவி குறித்து பேசி கண்ணீர் வடித்தார் அமைச்சர் சி.வெ.கணேசன்.
விழாவில் பேசிய அமைச்சர் சி.வெ.கணேசன், “கஷடம் வரும்போதெல்லாம், மனதில் வேதனை ஏற்படுகிற போதெல்லாம் என்னுடைய மனைவி தையல் மிஷினில் உட்கார்ந்து தைக்க ஆரம்பிப்பார். பெண்கள் தங்களுக்கு ஏற்படுகின்ற வலி, கஷ்டம், குடும்ப பாரத்தை வெளியே சொல்ல முடியாமல் இருக்கிறபோது தையல் மிஷினே கதி என்று இருப்பார்கள்.
இதை பார்த்து திட்டக்குடி தொகுதியிலேயே எவ்வளவு பெண்கள் கணவனை இழந்து கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் தையல் மிஷின் வாங்கி கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இந்த முயற்சியிலும் அப்படி தான் இறங்கினேன். இங்கு வந்திருக்கிற பெண்களை பார்க்கிற போது, எனது சகோதரிகள், எனது தாயார் தான் நினைவுக்கு வருகிறார்கள்.
இது என் மனைவியின் ஆசை. என் மனைவியின் எண்ணம். யாரையும் ஏமாற்றக்கூடாது எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பார் எனது மனைவி. நான் மனைவியை இழந்து தவிப்பது போல், என்னை போல் நீங்களும் எவ்வளவோ வலிகளோடு கணவனை இழந்து தவித்துக்கொண்டிருக்கிறீர்கள். எனவேதான் உங்களில் ஒருவனாக ஒரு சகோதரனாக உதவி செய்ய வேண்டும் என்று எண்ணியே இத்தகைய முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறேன்.
இந்த தொகுதியில் கணவனை இழந்து வாடும் பெண்களுக்கு இன்னும் செய்வேன். ஒன்றும் முடியவில்லை என்றாலும் என்னிடம் இருக்கும் சொத்துக்களை விற்றாவது அவர்களுக்கு உதவி செய்வேன்" என்று கூறினார். மனைவி பற்றி பேசும்போது மேடையில் உடைந்து அழுதார் அமைச்சர் சி.வெ.கணேசன். சில நொடிகள் மனைவியை நினைத்து அழுத அமைச்சரை அவரது ஆதரவாளர்கள் தேற்றினர்.
அமைச்சர் சி.வெ. கணேசனின் மனைவி பவானி (54) விருத்தாசலத்தில் உள்ள அவரது வீட்டில் கடந்த 2021ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.