Published : 15 Aug 2014 10:00 AM
Last Updated : 15 Aug 2014 10:00 AM

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதல்: ஒருவருக்கு வெட்டு

பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒரு மாணவர் வெட்டப்பட்டார். அவரை வெட்டிய மாணவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மேலும் 6 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இரு கோஷ்டிகளாக பிரிந்து கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயே கடந்த திங்கள்கிழமை பயங்கரமாக மோதிக்கொண்டனர். இந்த மோதலில் வானகரத்தை சேர்ந்த சதீஷ் என்ற மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அரசு பொது மருத்துவமனையில் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கல்லூரி வளாகத்தில் சுற்றிய மாணவர்களை போலீஸார் போட்டோ எடுத்து வைத்திருந்தனர். வெட்டுப்பட்ட மாணவர் சதீஷிடம் அந்த போட்டோவை காட்டி விசாரித்தனர். அப்போது அவர் தன்னை சூழ்ந்து நின்று தாக்கிய 7 மாணவர்களை அடையாளம் காட்டினார். இதில் செங்குன்றம் அடுத்த பூதூரை சேர்ந்த மோகன் (20) என்ற மாணவரை புதன்கிழமை இரவில் போலீஸார் கைது செய்தனர். சதீஷை வெட்டிய ஒரு கத்தியையும் மோகனிடமிருந்து போலீஸார் பறிமுதல் செய்தனர். மூன்றாம் ஆண்டு மாணவரான மோகன் மீது கொலை முயற்சி உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மோகனின் குடும்பம் மிகவும் வறுமையானது. தந்தை சங்கர் மினி வேன் டிரைவராக உள்ளார். 4-ம் வகுப்பு படிக்கும்போதே தாயை இழந்த இவரை, பாட்டிதான் வளர்த்துள்ளார். இவருக்கு 12-ம் வகுப்பு முடித்த ஒரு தங்கையும் உள்ளார். இப்படி குடும்ப சூழ்நிலையை பற்றியெல்லாம் கவலைப்படாமல் மோகனைப் போன்று பல மாணவர்கள் தவறான வழிகளில் செல்கின்றனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 6 மாணவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள். தலைமறைவாக இருக்கும் 6 மாணவர்களும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான். கல்லூரியில் நடைபெற்ற மோதல் சம்பவத்துக்கு பின்னர் போலீஸார் தேடுவதை அறிந்து, இந்த 6 மாணவர்களும் தங்களது வீடுகளுக்கு செல்லாமல் வெளியில் தங்கியுள்ளனர். இவர்களை அடையாளம் கண்டுள்ள போலீஸார் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக காவல் ஆய்வாளர் தினகரன், உதவி ஆய்வாளர் எழில்வேந்தன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கைதாகியுள்ள மோகனும் அவரது நண்பர்களும் திருவள்ளூர் பகுதியில் இருந்து வருபவர்கள். வெட்டுப்பட்ட சதீஷ் பூந்தமல்லியில் இருந்து வருபவர். பேருந்து வழித்தடத்தின் அடிப்படையிலேயே இவர்களுக்குள் கோஷ்டி உருவாகி மோதல் ஏற்பட்டு சக மாணவரை வெட்டும் அளவுக்கு மனநிலை மாறியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x