முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்
முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்

அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்ய ‘நீங்கள் நலமா?’ திட்டம் நாளை தொடக்கம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Published on

மயிலாடுதுறை: அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில் ‘நீங்கள் நலமா?’ என்ற திட்டம் நாளை (மார்ச் 6) தொடங்கப்பட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மயிலாடுதுறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். இந்த விழாவில் அவர் பேசியதாவது:

உள்கட்டமைப்பு வசதிகள்: புதிய மாவட்டங்களை அறிவிப்பது பெரிது அல்ல. அதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை அமைத்துதருவதுதான் பெரிது‌. பல்வேறு புதியமாவட்டங்களின் உள்கட்டமைப்புவசதிகள் திமுக ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டன. தமிழக அரசின் திட்டங்கள் உரிய முறையில் மக்களை சென்றடைகின்றனவா என்பதை உறுதிசெய்யும் வகையில் ’நீங்கள் நலமா?’ என்றபுதிய திட்டம் மார்ச் 6-ம் தேதி(நாளை) தொடங்கப்பட உள்ளது.

தொலைபேசி மூலமாக.. இதில், மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், தலைமைச் செயலர்,அனைத்து துறைச் செயலாளர்கள், மக்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கருத்துகளைக் கேட்டறிவார்கள். நானும் மக்களைத் தொடர்புகொண்டு பேசுவேன். இதன் அடிப்படையில் திட்டங்கள் மேலும் செம்மைப்படுத்தப்படும்.

நிதி நெருக்கடி இருந்தாலும் எந்த நலத்திட்டமும் நிறுத்தப்படவில்லை. தேர்தல் சமயத்தில் வந்துபோகிறவர்கள் நாங்கள் அல்ல. தேர்தல் வர உள்ளதால், பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம்வரத் தொடங்கியுள்ளார்.

வரவேண்டாம் என்று சொல்லவில்லை. தமிழகத்துக்கு நன்மை செய்துவிட்டு, நமது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டு பிரதமர் வரட்டும். ஆனால், தமிழக மக்களின் வரிப் பணமும், வாக்குகளும் மட்டும் போதும் என்று அவர் நினைக்கிறார்.

தமிழக மக்கள் ஏமாறமாட்டார்கள்: தமிழக மக்கள் ஒருபோதும் மோடியைபார்த்து ஏமாறமாட்டார்கள். தமிழகத்தின் உரிமைக்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபடும் திராவிட மாடல் அரசுக்குத்தான் மக்கள் உறுதுணையாக நிற்பார்கள். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி. எம்எல்ஏக்கள், அரசுத் துறை செயலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in