

சென்னை: புதிய ஆராய்ச்சிகள் மூலம் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வலியுறுத்தினார்.
தேசிய ஆராய்ச்சியாளர்கள் உச்சி மாநாடு சென்னை ஐஐடியில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவுக்கு சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி தலைமை வகித்தார். மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் காணொலி காட்சி மூலம் மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:
நாட்டின் பொருளாதார மேம்பாடு, வளர்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது அவசியம். கடந்த சிலஆண்டுகளாகவே புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதும், புதிய தொழில்களை ஆதரிப்பதும் அதிகரித்துள்ளது.
டிஜிட்டல் துறை வளர்ச்சி நன்கு அடைந்துள்ளது.அதேபோல,செமி கண்டக்டர் துறையை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் பாரத் செமி கண்டக்டர் ஆராய்ச்சி மையம் நிறுவப்பட உள்ளது. இது வருங்காலத்தில் அனைத்து துறைகளுக்கும் பயன்படும் செமி கண்டக்டர் கண்டுபிடிப்புகளுக்கான மையமாக செயல்படும். மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு கட்சிகளும் இலவசங்கள் குறித்து ஆலோசித்து வருகின்றன.
ஆனால், சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சர்கள் குழு கூட்டத்தில்கூட, அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல என்ன செய்யலாம் என்பது குறித்துதான் பிரதமர் மோடி பேசினார். அதற்கான செயல் திட்டங்களை வகுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
நாட்டின் வளர்ச்சியில் ஆராய்ச்சி மாணவர்களின் பங்களிப்பு அதிகம் தேவைப்படுகிறது. புதிய ஆராய்ச்சிகள் மூலம் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் துணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ஹைதராபாத் ஐஐடிஇயக்குநர் மூர்த்தி, பெங்களூரு இந்திய அறிவியல் மைய இயக்குநர் கோவிந்தன் ரங்கராஜன், கர்னூல் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் சோமயாஜுலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மார்ச் 7-ம் தேதி வரைஇந்த மாநாடு நடைபெறுகிறது. இதில், நாடு முழுவதும் உள்ளஐஐடி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.