இலங்கை வல்வெட்டித்துறையில் சாந்தனின் உடல் அடக்கம்: ஊர்வலமாகச் சென்று தமிழர்கள் இறுதி அஞ்சலி

சாந்தனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய அவரது தாயார் மகேஸ்வரி.
சாந்தனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய அவரது தாயார் மகேஸ்வரி.
Updated on
1 min read

ராமேசுவரம்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன், 2022-ம்ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டார்.

இலங்கை தமிழரான சாந்தன் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஜன.27-ம் தேதி உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கல்லீரல் செயலிழப்பு மற்றும் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில் பிப்ரவரி 29 அன்று சாந்தன் காலமானார்.

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் தனது மகன் சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு மத்திய அரசுக்கு இலங்கையில் உள்ள அவரது தாயார் மகேஸ்வரி, பலமுறை கோரிக்கை வைத்தார். சாந்தன் இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில் மரணமடைந்தார்.

சாந்தனின் உடல் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு கொண்டு வரப்பட்டது. கொழும்புவிலிருந்து வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட சாந்தனின் உடலுக்கு வவுனியா, கிளிநொச்சி உட்பட வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ள குமரப்பா நினைவு சதுக்கத்தில் உடல் வைக்கப்பட்டு, அங்குஅரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் வல்வெட்டித்துறையில் சாந்தனின் இல்லத்தில் இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டபின் எள்ளங்குளம் இந்து மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in