

சட்டப்பேரவை கூட்டத் தொடர் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை முதல்வர் ஜெயலலிதாவை வழியனுப்ப அவர் செல்லும் வழியில் வரிசையாக அமைச்சர்கள் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் காத்திருந்தனர். போலீஸ் தடுப்பு வளையத்துக்கு வெளியே தொண்டர்கள் நின்றுகொண்டிருந்தனர்.
அப்போது தி.நகர் எம்எல்ஏ கலைராஜன் சட்டப்பேரவையின் 4-வது வாயில் வழியாக அவசரம் அவசரமாக வெளியேறி, தொண்டர்கள் கூட்டத்துக்குள் நுழைந்து, முன்னேறிச் சென்று எம்எல்ஏக்கள் வரிசையில் நின்றார். முதல்வர் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டவுடன் தொண்டர்கள் மத்தியில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீஸார் அவர்களை கட்டுப்படுத்தினர்.
இந்நிலையில் தொண்டர்கள் சற்று முன்னேறி வழியனுப்ப நின்றிருந்த எம்எல்ஏக்கள் மீது விழுந்தனர். இதில் தி.நகர் அதிமுக எம்எல்ஏ கலைராஜன் கீழே விழுந்தார். இதனால் அவருக்கு உதட்டில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.