Published : 24 Feb 2018 07:01 PM
Last Updated : 24 Feb 2018 07:01 PM

இரண்டு ரிமோட்களில் சிலையைத் திறந்த ஈபிஎஸ்-ஓபிஎஸ்; யார் உண்மையில் திறந்தது?-குழப்பத்தில் தொண்டர்கள்

ஜெயலலிதா சிலை திறப்பின் போது சிலையைத் திறக்கும் ரிமோட்டை ஆளுக்கொரு கையில் வைத்துக்கொண்டு ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் இயக்கினர். ஒரே நேரத்தில் இரண்டு ரிமோட்கள் ஒன்றாக வேலை செய்யாது என்பது தெரிந்தும் தொண்டர்களை ஏமாற்றும் செயல் இது என அங்கு வந்த சிலர் இதை விமர்சித்தனர்.

அதிமுக பொதுச்செயலாளர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் உருவச்சிலை திறக்கப்பட்டது. சிலை ஜெயலலிதா போன்ற தோற்றத்தில் இல்லை என்ற சர்ச்சை ஒருபுறம் இருக்க சிலைத்திறப்பில் நடந்த நகைச்சுவை தற்போது வெளிவந்துள்ளது.

ஜெயலலிதாவுக்கு எம்ஜிஆர் சிலை அருகிலேயே சிலை அமைக்கப்பட்டது. இதற்காக அவசர அவசரமாக சிலை வடிக்கப்பட்டு பொருத்தப்பட்டது. சிலையை இன்று ஜெயலலிதாவின் பிறந்தநாளில் திறப்பது என்று முடிவானது.

ஜெயலலிதாவின் சிலையை சென்னை வந்த பிரதமர் மோடி திறக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் அதை அவர் தவிர்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சிலையை தாங்களே திறப்பது என அதிமுக தலைமை முடிவு செய்தது.

சமீபகாலமாக ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி இடையே உரசல் அதிகரித்து வருவதை வெளிப்படையாக பார்க்க முடிகிறது. பாஜக தலைவர்கள் ஓபிஎஸ்ஸை விமர்சிக்க ஆட்சியின் சட்டம் ஒழுங்கையே விமர்சித்தாலும் அதுபற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோபம் கொள்ளாமல் இருக்கிறார்.

பிரதமர் மோடி சொல்லித்தான் நான் அதிமுகவில் எனது அணியை இணைத்தேன் என்று ஓபிஎஸ் கூற அதை எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார். இதுபோன்ற பல விஷயங்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் தனித்தனி கோஷ்டியாக இயங்குவதையும் பார்க்க முடிகிறது.

ஆனால் இவற்றை வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருவரும் ஒற்றுமையாக இருப்பது போல் காட்டிக்கொள்வது வாடிக்கையான விஷயம். அது எந்த அளவிற்கு ஒற்றுமை என்றால் ஒரு சிலையை திறக்க இரண்டு ரிமோட்களை இருவரும் உபயோகப்படுத்தும் அளவுக்கு உள்ளது என தொண்டர்கள் பேசிக்கொண்டனர்.

இரண்டு ரிமோட்கள் மூலம் சிலையைத் திறக்கும் சென்சாரை இயக்க முடியாது. ஆனால் இது தெரிந்தும் அதிகாரிகள், அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், மீடியாக்கள் இருக்கும்போதே ஆளுக்கொரு ரிமோட்டை இயக்கி சிலையை திறந்தது சர்ச்சையாகி உள்ளது. சிலை சமபந்தப்பட்ட அனைத்து விவகாரங்களும் இன்று சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

“ஆமா அந்த சரியான ரிமோட்டை இயக்கியது யார்? யார் ரிமோட்டில் சிலை திறக்கப்பட்டது?” என்ற கேள்வியும் தொண்டர்கள் இடையே எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x