Published : 05 Mar 2024 06:07 AM
Last Updated : 05 Mar 2024 06:07 AM
சென்னை: கருணாநிதி நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞர் உலகம்’ அருங்காட்சியகத்தை நாளை (மார்ச் 6) முதல் இணையதளம் மூலம் அனுமதிச்சீட்டு பெற்று பொதுமக்கள் பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தை, கடந்த பிப்.26-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கருணாநிதி நினைவிட வளாகத்தின் நிலவறையில், அவரது கலை, இலக்கிய, அரசியல் வாழ்க்கை வரலாற்றை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய பல்வேறு அரங்கங்களுடன் ‘கலைஞர் உலகம்’ என்னும் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த, அருங்காட்சியகத்தில், கருணாநிதியின் அரிய புகைப்படங்கள், உரிமை வீரர் கலைஞர், கலைஞருடன் ஒரு புகைப்படம், புதிரை வெல் கலைஞர் வழிசெல், அரசியல் கலை அறிஞர் கலைஞர், கலைஞருடன் ஒரு நேர்காணல், நவீனத் தமிழகத்தின் சிற்பி, பண்பாட்டுப் பேழை, கலைஞரின் வரலாற்றுச் சுவடுகள், கலைஞரின் மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள், சரித்திர நாயகனின் சாதனைப் பயணம் போன்ற அரங்கங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தைப் பொதுமக்கள் பார்வையிட நாளை (மார்ச் 6) முதல் அனுமதிக்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசின் https://www.kalaignarulagam.org/ என்ற இணையதள முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் பதிவு செய்து அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும். முற்றிலும் இலவசமாக பொதுமக்கள் கண்டுகளிக்கலாம்.
ஒருவர் ஒரு செல்போன் எண் மூலம் அதிகபட்சமாக 5 அனுமதிச் சீட்டுகள் வரை பெற்றுக்கொள்ளலாம். இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் சீட்டுடன் வருபவர்களுக்கு நிலவறையிலுள்ள கலைஞர் உலகத்துக்குச் செல்ல அனுமதி வழங்கப்படும்.
தினசரி காலை 9 முதல் இரவு 8 மணி வரை 6 காட்சிகளாக நடைபெறும். பொதுமக்கள் தங்களுக்கு வசதியான காட்சி நேரத்தைத் தேர்வுசெய்து முன்கூட்டியே அனுமதிச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம். அவர்கள், காட்சி நேரத்துக்கு 30 நிமிடங்களுக்கு முன்பாகவே வர வேண்டும். கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பார்வையிட சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT