

புதுக்கோட்டை: ஆதார் பதிவு, திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக ஆதார் மையங்களில் மாணவர்கள், பொதுமக்கள் குவிந்து வருவதால், அவற்றை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, ஆதார் மையங்களில் கூடுதல் பணியாளர்களை நியமித்து மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆதார் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், ஆதார் விவரங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இப்பணிகளை ஆதார் மையங்கள், அஞ்சல் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், ஒரு சில வங்கிக் கிளைகளில் மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, கல்வி உதவித் தொகை, பொதுத் தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளதால் ஆதார் எடுப்பதற்கும், ஆதார் திருத்தம் செய்வதற்கும் ஆதார் மையங்களில் மாணவர்களுடன், பொதுமக்கள் திரண்டு வருகின்றனர்.
குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே ஆதார் மையங்களில் அன்றாடம் ஆதார் பணி மேற்கொள்வதால் முதல் நாள் வந்தவர்கள் கூட மறுநாளும் வரவேண்டிய சூழல் உள்ளது. மேலும், ஆதார் மையங்களில் போதுமான இட வசதி இல்லை. குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை. வெயிலில் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, ஆதார் மையங்களில் கூடுதல் பணியாளர்களை நியமிப்பதுடன், தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் த.செங்கோடன் கூறியது: பெரும்பாலான ஆதார் மையங்களில் ஒரு கணினியுடன், ஒரு பணியாளர் மட்டுமே உள்ளார். தினசரி 30 பேருக்கு மட்டுமே ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் சில நேரங்களில் நெட்வொர்க் பிரச்சினை என்பதை காரணம் காட்டி அனைவருக்கும் சேவை கிடைப்பதில்லை.
எனவே ஆதார் பதிவு, திருத்தம் போன்றவற்றை பொதுமக்கள் எளிதாக மேற்கொள்வதற்கு வசதியாக ஆதார் மையங்களில் கூடுதல் கணினிகளுடன், கூடுதல் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதார் மையங்களை உடனடியாக மேம்படுத்தவில்லை என்றால் அந்தந்த ஆதார் மையங்களை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து அரசு கேபிள் டிவி மாவட்ட அலுவலகத்தில் கேட்ட போது, “தற்போது ஆதார் மையங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இதற்காக 6 பேரை கூடுதலாக பணியமர்த்திக் கொள்ள அனுமதி கோரி தலைமை அலுவலகத்துக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. உத்தரவு கிடைத்ததும் தேவையான இடங்களில் கூடுதல் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள்’’ என்றனர்.