Published : 05 Mar 2024 04:08 AM
Last Updated : 05 Mar 2024 04:08 AM

வெள்ள நிவாரணம் கிடைக்காமல் பாதிப்பு: நெல்லை ஆட்சியரிடம் உள்நாட்டு மீனவர்கள் வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த உள்நாட்டு மீனவர்கள்.(வலது) அடிப்படை வசதிகள் கேட்டு பேட்டை தங்கம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் மனு அளிக்க வந்தனர். படங்கள்: மு.லெட்சுமி அருண்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உள்நாட்டு மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டு, மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயனிடம் மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், ‘கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உள்நாட்டு மீனவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்படவில்லை. இது குறித்து ஏற்கெனவே மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்’ என்று, உள் நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தினர், சுத்தமல்லி வ.உ.சி நகர் முருகேசன் தலைமையில் அளித்த மனுவில் கூறியுள்ளனர்.

டவுன் நியாய விலைக் கடை: நாம் தமிழர் கட்சி திருநெல்வேலி சட்டப் பேரவை தொகுதி இணைசெயலாளர் மாரிசங்கர் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், ‘திருநெல்வேலி டவுன் சங்கரநாராயணன் தெரு, தடிவீரன் கோவில் மேலத்தெரு, அபிராமி நகர் ஆகிய தெருக்களில் உள்ளவர்கள் இங்குள்ள நியாய விலை கடையில் பொருட்களை பெற்று வந்தனர். கடந்த டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தில் இந்த கடை மிகவும் சேதம் அடைந்தது. இதனால் கோடீஸ்வரன் நகர் பகுதிக்கு நியாய விலை கடை மாற்றப்பட்டுள்ளது. அங்கு சென்று பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். எனவே, எங்கள் தெருவிலேயே நியாய விலைக் கடையை செயல்பட வைக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டையில் அடிப்படை வசதி: ‘பேட்டை தங்கம்மன் கோவில் தெருவில் 56 ஆண்டுகளாக, 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வசிக்கின்றனர். மாநகராட்சிக்கு தீர்வை செலுத்தி, மின் இணைப்பு பெற்று குடியிருந்து வரும் நிலையில் இதுவரை பட்டாவழங்கப்படவில்லை. இந்த பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின் விளக்கு வசதி ஆகியவற்றை செய்து தர வேண்டும்’ என்று கோரி, இப்பகுதி மக்கள் சப்பானி என்பவர்தலைமையில் மனு அளித்தனர்.

சுத்தமல்லி மக்கள்: எஸ்.டி.பி.ஐ. கட்சி மானூர் தெற்கு ஒன்றியத் தலைவர் ஷேக் முகமது தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், ‘சுத்தமல்லி வ.உ.சி நகர், கே.எம்.ஏ. நகர், பர்வின் நகர் உள்ளிட்ட தெருக்களில் சாலை, தெரு விளக்கு, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கிராம சபை கூட்டத்தின் வாயிலாக மனுக்கள் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூய்மை பணியாளர் படுகாயம்: மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன், ஆதித் தமிழர் பேரவை கலைக் கண்ணன் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் அளித்த மனுவில், ‘கடந்த 28-ந் தேதி பணகுடியை சேர்ந்த தூய்மை பணியாளர் வசந்தி என்பவர் பணியில் ஈடுபட்டிருந்த போது கார் மோதி இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும், ரூ.5 லட்சம் நிவாரணமும் வழங்க வேண்டும்’ என்று வலியுறுத்தப் பட்டிருந்தது. முதியோர் உதவி தொகை கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் திருநெல்வேலியை சேர்ந்த 90 வயதை கடந்த அவ்வையார் என்ற மூதாட்டி மனு அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x