

தூத்துக்குடி: மழை வெள்ளத்தில் இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி தாப்பாத்தி கிராம விவசாயிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நேற்று நடைபெற்றது. எட்டயபுரம் வட்டம் தாப்பாத்தி கிராம விவசாயிகள், கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் தலைமையில் அளித்த மனு விவரம்: கடந்த டிசம்பர் 17, 18-ம் தேதிகளில் பெய்த பெருமழையின் போதுதாப்பாத்தி கிராமத்தில் பல ஆடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தன. மழை வெள்ளத்தில் இறந்த ஆடுகளுக்கு ரூ.4,000 நிவாரணம் வழங்கப்படும் என, தமிழக முதல்வர் அறிவித்தார். ஆனால், நிவாரணம் எங்கள் கிராம விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. நிவாரணத் தொகை விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவந்தாகுளம் பள்ளி: தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்சி.வைரலட்சுமி தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், “சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மாணவ, மாணவிகள் 8-ம் வகுப்புக்கு மேல் அரசு பள்ளியில் பயில தொலைவில் உள்ள சி.வ.அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.எனவே, சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 9, 10 -ம் வகுப்புகளை தொடங்கி 2024 - 2025-ம் கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏரல் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.ஜெயபாலன் அளித்த மனுவில், “ஏரல் காந்தி சிலை அருகே உள்ள டாஸ்மாக் கடை பெண்கள், மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இக்கடையை அகற்ற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஆர்.காசிலிங்கம் அளித்த மனுவில், “தூத்துக்குடியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. டூவிபுரம், அண்ணாநகர் பகுதியில் மட்டும் 4 குழந்தைகளை தெரு நாய்கள் கடித்துள்ளன. தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரான இழப்பீடு: ஏ.குமரெட்டியாபுரம், தெற்கு வீர பாண்டிய புரம், குமார கிரி கிராம மக்கள் அளித்த மனுவில், “எங்கள் பகுதியில் சிப் காட் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு 2008-ல் ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம், 2010-ல் ரூ.6.50 லட்சம், 2015-ல் ரூ.15.35 லட்சம், 2018-ல் ரூ.18.55 லட்சம் என வெவ்வேறு விதமாக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த இடங்கள்அனைத்தும் ஒரே அரசாணை மூலம் ஒரே நேரத்தில் கையகப்படுத்தப் பட்டதாகும். எனவே, அனைத்துஇடங்களுக்கும் ஒரே சீரானஇழப்பீடு வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.