Published : 05 Mar 2024 04:04 AM
Last Updated : 05 Mar 2024 04:04 AM

திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு விரைவில் முடியும்: துரைமுருகன்

வேலூர் மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் காட்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சர் துரைமுருகன். அருகில், ஆட்சியர் சுப்புலட்சுமி, எம்.பி.கதிர் ஆனந்த் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்: திமுக கூட்டணியில் இன்னும் ஓரிரு நாட்களில் தொகுதி உடன்பாடு முடிவு ஏற்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தகுதியான பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, வேலூர், காட்பாடி வட்டங்களைச் சேர்ந்த 542 பயனாளிகளுக்கு ரூ.4.73 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி காட்பாடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் பங்கேற்று பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கி பேசும் போது, ‘‘நாடு சுதந்திரம் அடைந்து கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் பலர் சொந்தமான வீடு இல்லாமல் உள்ளனர். ஒரு அரசின் முக்கிய நோக்கம் நாட்டு மக்களுக்கு உண்ண உணவு, உடுத்த உடை, தங்குவதற்கு உறைவிடம் அமைத்துக் கொடுப்பதே தலையாய கடமை. முன்னாள் முதல்வர் கருணாநிதி குடிசைவாழ் மக்களுக்கும் அன்றே வீட்டுமனை வழங்கியவர். தஞ்சையில் நிலச்சுவான்தாரர் களிடம் வேலை செய்து வந்த பல லட்சம் ஏழை விவசாயிகளுக்கு ஒரே ஆணையில் அவர்கள் வசித்த இடங்களை அவர்களுக்கே வழங்கியவர் கருணாநிதி.

அவரது நூற்றாண்டு விழாவை யொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்க வழிவகை செய்துள்ளார். தேர்தல் முடிந்தவுடன் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். காட்பாடியில் கரிகிரி பகுதியில் 400 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு மிகச் சிறப்பாக கட்டப்பட்டுள்ளது. இதில், 100 பயனாளிகளுக்கு ஏற்கனவே வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகள் காட்பாடி சட்டப்பேரவை தொகுதியைச் சேர்ந்த பயனாளி களுக்கு வழங்கப்படும்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில், வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி, வேலூர் மக்களவை உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி. நந்தகுமார், ப.கார்த்திகேயன், அமலு விஜயன், ஜே.எல்.ஈஸ் வரப்பன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறும் போது, ‘‘மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை தமிழக அரசு தடுப்பதாக பாஜகவினர் குற்றஞ் சாட்டியுள்ளனர். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழக அரசா நிறுத்தியது. எங்கள் மீது பழி கூறுவது சரியில்லை. எந்தெந்த திட்டங்களை தடுக்கிறோம் என அவர்கள் விரிவாக கூறினால் அனைத்துக்கும் பதில் தர தயாராக உள்ளோம். தமிழக திட்டங்களுக்கு தரவேண்டிய தொகையை தருவதில்லை.

பிரதமர் மோடி திமுகவை தாக்கி பேசுவது எல்லாம் அரசியல். பாஜகவினர் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை அச்சிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதுதொடர்பாக ரோஷம் வர வேண்டியது அதிமுகவுக்குத்தான். திமுக கூட்டணியில் இன்னும் ஓரிரு நாட்களில் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x