நவீன தொழில்நுட்பத்துடன் ‘கலைஞர் உலகம்’ அருங்காட்சியகம் - மார்ச் 6 முதல் பொதுமக்களுக்கு அனுமதி

நவீன தொழில்நுட்பத்துடன் ‘கலைஞர் உலகம்’ அருங்காட்சியகம் - மார்ச் 6 முதல் பொதுமக்களுக்கு அனுமதி
Updated on
2 min read

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞர் உலகம்’ என்ற அருங்காட்சியகம் நாளை மறுதினம் (மார்ச் 6) முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பு: முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞர் உலகம்’ என்ற அருங்காட்சியகம் நாளை மறுதினம் (மார்ச் 6) முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்படும் இதனைப் பார்வையிடுவதற்குத் தமிழ்நாடு அரசின் https://www.kalaignarulagam.org/ என்ற இணைய முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணைய முகவரியில் பொதுமக்கள் பதிவு செய்து அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

கலைஞர் உலகத்திற்கான அனுமதிச் சீட்டு பெறுவதற்குக் கட்டணம் ஏதுமில்லை. முற்றிலும் இலவசமாக கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம். ஒருவர் ஒரு மொபைல் எண்ணின் மூலம் அதிகபட்சமாக 5 அனுமதிச் சீட்டுகள் வரை பெற்றுக் கொள்ள இயலும். இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் சீட்டுடன் வருபவர்களுக்கு நிலவறையிலுள்ள கலைஞர் உலகத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

மேலும், ஒவ்வொரு நாளும் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 6 காட்சிகளாக நடைபெறும். பொதுமக்கள் தங்களுக்கு வசதியான காட்சி நேரத்தைத் தேர்வுசெய்து முன்கூட்டியே அனுமதிச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம். அக்காட்சியினைக் காண வரும் பொதுமக்கள், காட்சி நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வருகைபுரிய வேண்டும். கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பார்வையிட ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் ஆகும். எனினும் கருணாநிதியின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிச் சீட்டு ஏதும் தேவையில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் உலகம்: முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018 ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு 2.21 ஏக்கர் பரப்பில் ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அத்துடன், அண்ணா நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி நினைவிடத்தில் நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கி ‘கலைஞர் உலகம்’ என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் சாதனை திட்டங்கள், முக்கிய நிகழ்வுகள் புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ‘உரிமை போராளி கலைஞர்’ என்ற அறையில், சுதந்திர தினத்தில் தேசியக் கொடியை மாநில முதல்வர்கள் ஏற்றலாம் என்ற உரிமையை பெற்றுத் தந்து, முதல்முதலாக கொடியேற்றி அவர் பேசியது, அவரது அங்க அசைவுடன் தத்ரூபமாக, முப்பரிமாண தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்துடன், அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வது, கருணாநிதியின் 8 நூல்களின் பெயர் மீது கைவைத்தால், அந்த நூல் பற்றிய வீடியோ விளக்கம் கிடைப்பது ஆகிய வசதிகளும் உள்ளன.

கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை படக்காட்சிகளாக காட்டும் ‘அரசியல் கலை அறிஞர் கலைஞர்’ எனும் சிறிய திரையரங்கம், 7டி தொழில்நுட்பத்தில் காண்பிக்கும் ‘சரித்திர நாயகனின் சாதனைப் பயணம்’ என்ற தலைப்பிலான ரயில் பெட்டி போன்ற அறை ஆகியவையும் இங்கு உள்ள சுவாரஸ்யமான அம்சங்கள். மற்றொரு அறையில், கருணாநிதியின் அருகில் அமர்ந்து அவரது பேச்சை கேட்கும் வகையிலும் நவீன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in