“ஜாபருடன் திமுக தொடர்பு வைத்தது எப்படி?” - அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கே.சி.வீரமணி கேள்வி

“ஜாபருடன் திமுக தொடர்பு வைத்தது எப்படி?” - அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கே.சி.வீரமணி கேள்வி
Updated on
1 min read

திருப்பத்தூர்: “தமிழகத்தில் போதைப் பொருள் கடத்துபவர்களே திமுகவினர்தான்” என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டி அதிமுக இளைஞர் பாசறை, மகளிர் அணி மற்றும் மாணவரணி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே திருப்பத்தூர் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி தலைமை வகித்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசியது: ''திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தனர். அதேபோல, டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் என்றனர். ஆனால், எதையுமே அவர்கள் செய்யவில்லை.

பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தனர். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் விற்பனை அதிகமாக உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசின் முக்கிய துறைகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். டாஸ்மாக் நிர்வாகம், காவல் துறை போன்ற துறைகளை ஜெயலலிதா தன் விரல் நுனியில் வைத்திருந்தார். ஆனால், இன்றோ திமுக குடும்பத்தாரிடம் அரசின் முக்கிய துறைகள் உள்ளன. அரசு அதிகாரிகளை அவர்கள் ஆட்டிப் படைக்கின்றனர்.

போதைப் பொருள் நடமாட்டத்தால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழிகின்றனர். எங்கு பார்த்தாலும் தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் போதைப் பொருள் கடத்துபவர்களை திமுகவினர்தான். இப்படி இருந்தால் போதை பொருளை எப்படி ஒழிக்க முடியும். தமிழக மக்களும், திமுகவில் கூட்டணி வகிக்கும் கட்சித் தலைவர்களும் இதை கவனித்து தான் வருகின்றனர். வரும் தேர்தலில் தக்க பாடம் திமுகவுக்கு புகட்டப்படும்.

தற்போது போதைப் பொருள் வழக்கில் சிக்கியுள்ள ஜாபர் திருட்டு விசிடி வழக்கில் அதிமுக ஆட்சியின்போது பலமுறை கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர். இது திமுகவுக்கு தெரியாதா? அப்படி இருக்க அவருடன் திமுக தொடர்பு வைத்தது எப்படி? தமிழக மக்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்'' என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசை கண்டித்து முழக்கம் எழுப்பினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in