8,130 பேரூராட்சி பணியிடங்களை ரத்து செய்து தமிழக அரசு ஆணை: திரும்ப பெற ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: பேரூராட்சிகளில் 8,130 பணியிடங்களை ரத்து செய்யும் ஆணையை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மொத்தம் 490 பேரூராட்சிகள் உள்ளன. அவற்றில் எலக்ட்ரிஷியன், பிட்டர், அலுவலக காவலர், ஓட்டுநர், பிளம்பர், குடிநீர் குழாய் பராமரிப்பாளர், தெருவிளக்குப் பராமரிப்பு உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக 8,130 பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 7,061 பணிகள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், 1,069 பணியிடங்கள் காலியாக உள்ளன.
அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு முற்றிலும் எதிர் மாறாக மொத்தமுள்ள 8,130 பணியிடங்களையும் ரத்து செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
பேரூராட்சிகளில் குடிநீர் விநியோகம், தெருவிளக்குகளை மாற்றுதல், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகள் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டிருப்பது தான் இந்த பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு காரணம் ஆகும். தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் பேரூராட்சிகளின் அன்றாடப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்.
இதுவரை உள்ளாட்சி அமைப்புகளில் கவுரவமான ஊதியம் வழங்கப்பட்டு வந்த பணிகள், இனி தனியார் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டு மிகக்குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கப்படும். அதன் காரணமாக கவுரவமான ஊதியத்துடன் கண்ணியமாக வேலை செய்யும் வாய்ப்பு தமிழக இளைஞர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. இது சமூக அநீதி ஆகும்.
தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பாமல் இருக்கும் பணியிடங்களையும் ஒழிக்கும் வேலையைத் தான் திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. இது வளர்ச்சிக்கு வகை செய்யாது. இதை உணர்ந்து 8,130 பணியிடங்களை ஒழிக்கும் ஆணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். காலியிடங்களை நிரப்புவதுடன் 2 லட்சம் புதிய பணியிடங்களை உருவாக்கும் நடவடிக்கைகளையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
