சங்கரன்கோவில் அருகே வெடிவிபத்து: வீட்டில் பட்டாசு தயாரித்த தொழிலாளி உயிரிழப்பு
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீட்டில் பட்டாசு தயாரித்தபோது நேரிட்ட வெடி விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள கொக்குகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்வரன்(40). இவரது மனைவி ராமலட்சுமி. சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்த சதீஷ்வரன், யாருக்கும் தெரியாமல் வீட்டில் பட்டாசு தயாரித்து, விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று சதீஷ்வரன் பட்டாசு தயாரித்தபோது, திடீரென வெடிமருந்துகளில் உராய்வு ஏற்பட்டு, பலத்த சப்தத்துடன் வெடிகள் வெடித்துச் சிதறின.
இதில் வீடு இடிந்து விழுந்து, சதீஷ்வரன் உயிரிழந்தார். ராமலட்சுமிக்கு பலத்த காயம்ஏற்பட்டது. மேலும், அருகில் உள்ள சில வீடுகளும் சேதமடைந்தன.
காயமடைந்த ராமலெட்சுமி சங்கரன்கோவில் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். டிஎஸ்பி சுதிர் மற்றும் அய்யா புரம் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
