Published : 04 Mar 2024 05:56 AM
Last Updated : 04 Mar 2024 05:56 AM
மயிலாடுதுறை/சென்னை: மயிலாடுதுறையில் இன்று (மார்ச் 4) நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு உட்பட ரூ.655.44 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
மயிலாடுதுறை மாவட்டத்துக்கான புதிய ஆட்சியர் அலுவலகம், தரங்கம்பாடி சாலையில் மூங்கில்தோட்டம் பால்பண்ணை அருகில்ரூ.114.48 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை திறந்துவைக்கிறார்.
விழா ஏற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று ஆய்வு செய்தனர்.
பின்னர், அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியது: ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கும் முதல்வர், தொடர்ந்து ரூ.463.36 கோடி மதிப்பிலான 71 கட்டிடங்களையும் திறந்து வைக்கிறார். ரூ.88.62 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ள, 40 புதியகட்டிடப் பணிகளுக்கு அடிக்கல்நாட்டுகிறார். 12,653 பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
ரயிலில் சென்ற முதல்வர்: மயிலாடுதுறை விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில், மனைவி துர்கா ஸ்டாலினுடன் புறப்பட்டுச் சென்றார். எழும்பூர் ரயில் நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு மற்றும்எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் முதல்வரை வழியனுப்பி வைத்தனர். இரவு சீர்காழி வந்தடைந்த முதல்வர், அங்கிருந்து திருவெண்காட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். இன்று காலை 10 மணியளவில் மயிலாடுதுறையில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் முதல்வர், மதியம் 1.10 மணியளவில் மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து சோழன் விரைவு ரயில் மூலம் சென்னைக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
ரூ.254.80 கோடியில்... சென்னையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்டா பகுதி மக்கள் பயனடையும் வகையில் ரூ.254.80 கோடியில், 700 படுக்கைகளுடன் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை முதல்வர்ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார்.
மருத்துவக் கட்டமைப்புகள்: மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.3.08 கோடி, திருவாரூரில் ரூ.4.32 கோடி, நாகூரில் ரூ.5 கோடி, குற்றாலம் பகுதியில் ரூ.5 கோடி, ஆவடி, அம்மாபேட்டை, கண்டியப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.87 கோடி, மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ரூ.125 கோடி, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.162 கோடி, கோவைமருத்துவமனையில் ரூ.122 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் கட்டிடங்களையும் முதல்வர் விரைவில் திறந்துவைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT