

சென்னை: சென்னை காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவு சைபர் செல் மற்றும் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்லூரி சார்பில் மாணவர்களுக்கான ‘சைபர் ஹேக்கத்தான் - 2024’ போட்டி நடைபெற்றது. அதிக அளவில் நிகழும் சைபர் குற்றங்கள் தொடர்பான 6 தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டியில் பங்கேற்க மொத்தம் 262 அணிகள் பதிவு செய்திருந்தன. அதில் 179 அணிகள் தேர்வு செய்யப்பட்டன. முதல் சுற்று போட்டியில் 20 அணிகள் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தேர்வாகின.
ராமாபுரத்தில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் இறுதி போட்டி மார்ச் 1, 2-ம் தேதிகளில் நடைபெற்றது. இதில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்லூரி மாணவர் அசிந்தியா சிங் தலைமையிலான அணி முதல் பரிசைவென்றது.
பனிமலர் பொறியியல் கல்லூரி மாணவர் கவுசிங்ராம் அணி 2-ம் பரிசு, எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்லூரி மாணவர் சும்ரேஷ் அணி 3-ம் பரிசு, சென்னை தொழில்நுட்ப கல்லூரி மாணவர் அருண் பிரணவ் அணி 4-ம் பரிசு, லயோலா பொறியியல் கல்லூரி மாணவர் ராகுல் சண்முகம் அணி 5-ம் பரிசை வென்றது. பரிசுகளை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வழங்கினார்.