தாம்பரத்தில் செயல்படும் ’சீமாங்க்’ மையத்துக்கு கூடுதல் மருத்துவ பணியாளர்களை நியமிக்க கோரிக்கை

குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனையில் `சீமாங்க்' மையத்துக்காக, ரூ.6 கோடி செலவில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் .
குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனையில் `சீமாங்க்' மையத்துக்காக, ரூ.6 கோடி செலவில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் .
Updated on
1 min read

குரோம்பேட்டை: தாம்பரம் அரசு மருத்துவமனையில் செயல்படும் ஒருங்கிணைந்த அவசரக்கால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையத்துக்கு (சீமாங்க்) மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கூடுதல் மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனையில், ஒருங்கிணைந்த அவசரக்கால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையம் (சீமாங்க்) செயல்பட்டு வருகிறது. 75 படுக்கை வசதிகளுடன் பிரசவ காலத்தில் தாய்மார்களுக்கும், சிசுக்களுக்கும் 24 மணி நேரமும் இங்கு சிறப்பான சேவை வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 6 முதல் 8 குழந்தைகள் இங்கு பிறக்கின்றன.

தற்போது கூடுதலாக ரூ.6 கோடியில் முதல் மாடியில் புதிய கட்டிடம் இங்கு கட்டப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகளுடன், 50 படுக்கை வசதியும் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே பழைய (சீமாங்க்) மையத்துக்கு 15 மருத்துவர்கள், 25 செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளனர். இது போதுமானதாக இல்லை. கூடுதல் பணிச்சுமையினால் அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கூடுதலாக 50 படுக்கை வசதிகளுடன் புதிய கட்டிடம் திறக்கப்பட்டதால், இன்னும் பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் என, சுமார் 75 ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.

புதிய கட்டிடம் திறக்கும்போது அரசு (சீமாங்க்) மையத்துக்குத் தேவையான கூடுதல் மருத்துவர், செவிலியர் மற்றும்பணியாளர்களை அரசு சிறப்புக்கவனம் செலுத்தி நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் வி.சந்தானம் கூறும்போது, ``தாம்பரம் அரசு மருத்துவமனையில் கூடுதலாக, 50 படுக்கை வசதிகள் கொண்ட பிரசவ வார்டு கட்டி முடிக்கப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது.

இதை வரவேற்கிறோம். விரிவாக்கத்துக்கு ஏற்ப செவிலியர்கள், ஊழியர்களை அரசு நியமித்தால்தான் பிரசவ வார்டு சேவை சிறப்பாக இருக்கும். கூடுதலான செவிலியர்கள், டாக்டர்களை அரசு நியமிக்குமா என்பது குறித்து அரசு விளக்க வேண்டும்.

பழைய பிரசவ வார்டில் போதுமான ஊழியர்களும், செவிலியர்களும், டாக்டர்களும் இல்லாததால் ஒவ்வொரு ஊழியருக்கும் வேலைப்பளு அதிகமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு கூடுதலாகச் செவிலியர்கள், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களை நியமிக்க அரசு முன்வர வேண்டும்.

தமிழகத்தில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை வேலை இன்றி தவிக்கும் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பாக ஏற்படுத்திக் கொடுக்கலாம்'' என்று அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in