

தூத்துக்குடி: தோல்வி பயத்தால் அண்ணாமலை உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார் என, அமைச்சர் பெ.கீதாஜீவன் குற்றம் சாட்டினார்.
தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப் படுவதாக தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்களுக்கும் சொந்த கட்டிடம் கட்ட அதிக முயற்சி எடுத்து வருகிறோம். ஆண்டுக்கு 500 மையங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது.
மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் மூலம் 500 கட்டிடங்களும் கட்டப்படுகிறது. அது மட்டுமின்றி சட்டப் பேரவை உறுப்பினர் நிதி, ஒன்றிய பொது நிதி, பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியின் மூலமும் கட்டப்பட்டு வருகின்றன. அனைத்து அங்கன்வாடி மையங்களையும் நவீனப் படுத்த வேண்டும் என்று அரசு முயற்சி செய்து வருகிறது.
தோல்வி பயம்: பாஜக மாநில தலைவர் அண்ணா மலை தோல்வி பயத்தால் வாய்க்கு வந்ததை கூறி வருகிறார். வாயால் வடை சுடுவது என்பது அவருக்குத்தான் பொருந்தும். சொல்வது உண்மையா என்பதை கூட யோசிப்பது இல்லை. ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டம், தமிழக அரசு சார்பில் சமூக நலத்துறையால் செயல் படுத்தப்பட்டது. இது முழுக்க முழுக்க தமிழக அரசின் நிதி. கலைஞர் கனவு இல்லம் திட்டத்துக்காக, மோடி இல்லம் திட்டத்தை மாற்ற உள்ளார்கள் என்று கூறுகிறார்.
அதுபோல் எதுவும் செய்ய முடியாது. கலைஞர் கனவு இல்லம் என்பது 8 லட்சம் வீடற்றவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கும் திட்டம் ஆகும். மூன்றரை லட்சம் ரூபாய் மதிப்பில் ஆண்டுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக வீடற்றவர்கள் கணக்கெடுப்பு நடத்தப் பட்டு வருகிறது. இது முழுக்க முழுக்க தமிழக அரசின் நிதி ஆகும். உண்மைக்கு புறம்பாக பேசுகிறார் அண்ணாமலை. வெள்ள நிவாரணமாக ஒரு சல்லிக் காசு கூட கொடுக்கவில்லை. மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிக ளுக்கும் தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது என்றார்.