

சென்னை: மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பாஜகவினர் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வீடு வீடாக சென்று மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிப்பிலும் கவனம் செலுத்துகின்றனர். இந்நிலையில், 4-ம் தேதி சென்னைக்கு பிரதமர் வருவதையொட்டி, சென்னையில் பல்வேறு இடங்களில் பாஜகவினர் ‘தாமரையே விடை’ என்ற சுவரொட்டி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அனைத்து கேள்வி, பதில் வடிவில் அமைந்துள்ளது. அதன்படி, பாஜகவின் வளர்ச்சி அரசியல் வேண்டுமா (வளர்ச்சி அரசியலா) அல்லது திமுக - காங்கிரஸின் வாரிசு அரசியல் வேண்டுமா (வாரிசு அரசியலா) என்று கேட்பதுபோல் சுவரொட்டிகள் அமைந்துள்ளது. இதற்கு விடை கொடுக்கும் விதமாக ‘தாமரையே விடை’ என்ற பதில் முழக்க வாசகம் அதில் அமைந்துள்ளது. சென்னையில் பாஜகவினர் பல்வேறு இடங்களில் ஒட்டியுள்ள இந்த சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.