

சென்னை: திமுகவில் தொகுதி பங்கீடு தொடர்பாக அமைக்கப்பட்ட டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையிலான குழு கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகளை இறுதி செய்து வருகிறது.
இதன்படி நேற்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தப்பட்டது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்களவைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என்று திமுக குழுவிடம் கேட்டுக் கொண்டோம். நிச்சயம் ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என நம்புகிறோம். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும், நாடு முழுவதும் சமூக நல்லிணக்கம், சமூக நீதி மேலோங்கி இருக்க வேண்டும் என்பதில் எந்தவித சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் இயங்கி வருகிறோம். இவ்வாறு கூறினார்.
இதேபோல தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகனிடமும் நேற்று திமுக பேச்சுவார்த்தை நடத்தியது. இதுகுறித்து வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "ஒரு தொகுதி கோரியுள்ளோம். முதல்வர் நிச்சயம் ஒரு தொகுதி வழங்குவார் என நம்புகிறோம். எந்த தொகுதி ஒதுக்கினாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தயாராக உள்ளோம். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்" என்றார்.