Published : 05 Feb 2018 09:39 AM
Last Updated : 05 Feb 2018 09:39 AM

சிவில் சட்டத்தை மாற்றும் முயற்சியை ஏற்கமாட்டோம்: திருநாவுக்கரசர் கருத்து

மத்திய பாஜக அரசு சிவில் சட்டத்தை கிரிமினல் சட்டமாக மாற்றும் முயற்சியை ஏற்க மாட்டோம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சிறுபான்மையினர் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஏ.வருசை முகம்மது தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.எல்.முஹம்மது பைசல் வரவேற்றார்.

மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் பேசியதாவது: நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. நாட்டில் 20 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை உள்ளது. தலாக் என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இதில் மோடி தலையிட வேண்டிய அவசியம் இல்லை. சிவில் சட்டத்தை கிரிமினல் சட்டமாக மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது. இதை ஏற்கமாட்டோம். மோடி நாட்டை அதானியிடம் விற்று விட்டார். தமிழகம் மத்திய அரசின் பினாமி அரசாகத்தான் செயல்படுகிறது.

மத்திய பட்ஜெட்டில் மருத்துவ உதவித் திட்டத்துக்கு ரூ. 1,200 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதை ஒரு நபருக்கு என கணக்கிட்டால் ரூ.120 மட்டுமே. எனவே இது ஒரு ஏமாற்றுத் திட்டம். ஹஜ் மானியத்தை மத்திய அரசு ரத்து செய்திருப்பது முஸ்லிம்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. மொத்தத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே சிறுபான்மை மக்களை திருப்திப்படுத்த முடியும் என்றார்.

மாநாட்டில் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர், தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி.முஹம்மது பஷீர், மாநில துணைத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான், கேரள மாநில முஸ்லிம் லீக் தலைவர் செய்யது முனவ்வர் அலி ஷிஹாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜகான் ஆகியோர் மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசினர்.

திமுக முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் சுப.த.திவாகர், காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் தெய்வேந்திரன், நகர் தலைவர் டி.எம்.எஸ்.கோபி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x