

சென்னை: போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முக்கியரசாயனப் பொருட்களை, வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, டெல்லிகைலாஷ் பார்க் பகுதியில் செயல்பட்டு வந்த குடோனில் அதிரடியாக நுழைந்த டெல்லி போலீஸார், அங்கிருந்த சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்துபோதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், போதை பொருள் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்டஅயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. இதையடுத்து, திமுகவில் இருந்து ஜாபர் சாதிக் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
இதற்கிடையே, டெல்லியில் உள்ள போதை பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் பிப்.26-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் போலீஸார் கடந்த 23-ம் தேதி நோட்டீஸ் ஒட்டினர். ஆனால், விசாரணைக்கு அவர்ஆஜராகாமல், சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீஸார், சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். தொடர்ந்து வீட்டுக்குசீல் வைத்தனர்.
இதனிடையே ஜாபர்சாதிக் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக அனைத்து விமான நிலையங்களிலும் மத்திய போதை பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
மேலும், ஜாபர் சாதிக்கின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அவர் தொடர்புடைய 8 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.