

சென்னை: விளவங்கோடு இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் சார்பில் “ஓட்டு, ஓட்டுக்காக ஓட்டு” என்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணி சென்னைகலங்கரை விளக்கம் பகுதியில் நேற்று நடைபெற்றது.
இதில் மாநில தலைமை தேர்தல்அதிகாரி சத்யபிரத சாஹு, மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகர காவல் ஆணையர் சந்தீர் ராய் ரத்தோர் ஆகியோர் பங்கேற்று சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்படி, மாநிலம் முழுவதும் வாக்காளர் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சைக்கிள் பேரணியை நடத்தி இருக்கிறோம்.
ஒவ்வொரு வாக்காளரும், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களின் பெயர் விடுபட்டிருந்தால், பட்டியலில் பெயர்களை சேர்க்க அவகாசம் உள்ளது. அனைவரும் வாக்குப்பதிவு நாள் அன்று 100 சதவீதம் வாக்களிக்க வாக்குச்சாவடிகளுக்கு வர வேண்டும்.
திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை சார்பில்எங்களுக்கு கடிதம் அளிக்கும்போது, அதை நாங்கள் தேர்தல்ஆணையத்துக்கு அனுப்புவோம். ஆணையம் பரிசீலித்து, பிறப்பிக்கும் உத்தரவை செயல்படுத்துவோம். விளவங்கோடு தொகுதிகாலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களவை தேர்தலுடன் அத்தொகுதி இடைத்தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் தேர்தல் ஆணையம் உரிய முடிவை எடுக்கும்.
தேர்தலுக்காக முதல்கட்டமாக 15 கம்பெனி துணை ராணுவப்படையினர் வருகின்றனர். 7-ம் தேதி 10 கம்பெனி துணை ராணுவப்படையினர் வர உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.